காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நீடிப்பு: அமித்ஷா அவசர ஆலோசனை - நாடாளுமன்றத்தில் இன்று பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நீடிப்பதால், அங்குள்ள நிலவரம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று காஷ்மீர் பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
Published on

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம், பயங்கரவாதிகளின் எளிய இலக்காக அமைந்துள்ளது.

அங்கு அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை குறிவைத்து நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அதிர வைத்த இந்த தகவல்களைத் தொடர்ந்து, காஷ்மீரில் சமீப காலத்தில் இல்லாத வகையில் 90 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள், தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு மாநில அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கூட்டம், கூட்டமாக ஊர்களுக்கு திரும்ப தொடங்கினர்.

ஒரே நேரத்தில் அமர்நாத் புனித பயணிகளும், சுற்றுலா பயணிகளும் ஸ்ரீநகரில் இருந்து வெளியேற தொடங்கியதால் தனியார் விமான நிறுவனங்கள் கட்டணத்தை இஷ்டத்துக்கு அதிகரித்து விட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.

இதையடுத்து பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா ஸ்ரீநகர்-டெல்லி விமானங்களுக்கு ரூ.6,715-ம், டெல்லி-ஸ்ரீநகர் விமானங்களுக்கு ரூ.6,899-ம் கட்டணமாக நிர்ணயித்தது.

இந்த கட்டணம் 15-ந் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கல்லூரிகள், தங்கள் விடுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளை வெளியேற்றி சொந்த ஊர் திரும்புமாறு கூறி விட்டன. இஸ்லாமிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது.

விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேறி, ஊர் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் விடுதிகளை விட்டு வெளியேறி சொந்த ஊர்களுக்கு திரும்பியவண்ணம் உள்ளனர்.

ஸ்ரீநகரில் தால் ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகம், போலீஸ் தலைமை அலுவலகம், விமான நிலையம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து உள்ளனர்.

இதற்கிடையே காஷ்மீரை 3 ஆக பிரித்து, ஜம்மு மாநிலம், காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்து, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள அரசியல் சாசன சட்டம் பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை ரத்து செய்ய முடிவு எடுத்து உள்ளதாகவும், இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின உரையின்போது வெளியிடக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி மேலும் பதற்றத்தை ஏற்படுத்தின.

ஆனால் அப்படி எந்த தகவலும் இல்லை என காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் மறுத்துள்ளார். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காஷ்மீரில் நிலவி வருகிற அசாதாரணமான சூழ்நிலைக்கு மத்தியில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உயர் மட்டக்குழு கூட்டம் ஒன்றை கூட்டி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா, தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல், உளவுத்துறை (ஐ.பி.) தலைவர் அரவிந்த் குமார், வெளிநாட்டு உளவு பிரிவு (ரா) தலைவர் சமந்த் குமார் கோயல் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய சூழல், மக்கள் மனநிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள், படையினர் கண்காணிப்பு, ரோந்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அமித்ஷாவிடம் அதிகாரிகள் விளக்கினர்.

அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என உளவுத்தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே காஷ்மீர் மாநிலத்தில் கேரன் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே மர்மமான முறையில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

நேற்று மாலை காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா வீட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

இதில் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். முதலில் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் மெகபூபா இல்லத்தில் நடக்க இருந்ததாகவும், பரூக் அப்துல்லா உடல்நிலையை கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சி கூட்டம் அவரது வீட்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய உடனேயே காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப வரிந்து கட்டுகின்றன.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் காலை 9.30 மணிக்கு மத்திய மந்திரிசபையை கூட்டி ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com