ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தோல்வி: மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ஆதரவாளர்களுடன் வேட்பாளர் போராட்டம்

விருத்தாசலம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தோல்வி: மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ஆதரவாளர்களுடன் வேட்பாளர் போராட்டம்
Published on

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் விளாங்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பாலகிருஷ்ணன், வீரமுத்து உள்பட 5 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து கடந்த 2-ந்தேதி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமாரி அறிவித்தார்.

அப்போது அங்கிருந்த வீரமுத்து ஆதரவாளர்கள், அதிக வாக்குகள் பெற்ற வீரமுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்காமல், குறைந்த வாக்குகளை பெற்ற பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என கூறி வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து நேற்று முன்தினம் வீரமுத்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வீரமுத்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் தனது கோரிக்கையை புகாராக எழுதி கொடுத்தார். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வீரமுத்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று விளாங்காட்டூர் பஸ் நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் தாசில்தார் கவியரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் தான் கொண்டு வந்த மண்எண்ணெயை திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார், உடனே அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.

ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்ற போலீசார் முயன்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சாத்தியம் கிராமத்துக்கு சென்ற வீரமுத்து ஆதரவாளர்கள் அங்குள்ள பஸ் நிறுத்தம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி வேட்பாளர் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து நேற்று 3-வது நாளாக போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com