கொரடாச்சேரி,
கொரடாச்சேரி ஒன்றியத்தில் ஆற்றுநீர் பாசனம் மூலம் சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளது. நேரடி நெல் விதைப்பு மூலமும், திருந்திய நெல் சாகுபடி மூலமும், பழைய நெல் நடவு முறையிலும் தங்கள் சூழலுக்கு ஏற்ப நெல் சாகுபடியினை விவசாயிகள் செய்து வருகின்றனர்.
சாகுபடிக்கு தேவையான அளவுக்கு தாராளமாக ஆறுகளில் தண்ணீர் கிடைக்காததால் பணிகளை தொடங்குவதில் விவசாயிகளிடம் சற்று தொய்வு ஏற்பட்டிருந்தது. தற்போது ஆறுகளில் தண்ணீர் வந்தாலும் முறை வைத்து விடப்படுவதால் உழவு செய்தல், நாற்று பறித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் நடவுப்பணிகள் முடியும் வரை 30 நாட்களுக்கு முறைவைக்காமல் தண்ணீர் விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை கொரடாச்சேரி ஒன்றியத்திலும் பல்வேறு இடங்களில் பெய்தது. இந்த மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரளவுக்கு கிடைக்கும் ஆற்றுநீரோடு மழைநீரும் சேர்ந்து கிடைப்பதால் தொய்வின்றி நெல் சாகுபடியை தொடரும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நெல் நாற்றுகள் ஆரோக்கியமாக வளர தற்போது உரம் தேவைப்படுகிறது. யூரியா, டி.ஏ.பி. போன்ற உரங்கள் தற்போது விவசாயிகளுக்கு தேவைப்படுகிறது. இந்த உரங்கள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டாலும் அந்நிறுவனங்களால் முழு தேவைக்கும் ஈடுசெய்து வழங்க முடியவில்லை. அதனால் தனியார் நிறுவனங்களில் உரங்களை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
கூட்டுறவு நிறுவனங்களில் மூட்டை ரூ.260-க்கு விற்கப்படும் யூரியா, தனியார் நிறுவனங்களில் ரூ.280-ல் இருந்து ரூ.300 வரை விற்கப்படுகிறது. டி.ஏ.பி .உரம் கூட்டுறவு நிறுவனங்களில் மூட்டை ரூ.1,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உரம் தனியார் கடைகளில் ரூ.1,380 முதல் ரூ.1,400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை வேறுபாட்டால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தமிழக அரசு உரத்திற்கு மானியம் வழங்கி விலையினை குறைக்க வேண்டும். தனியார் கடைகளில் அனுமதிக்கப்பட்ட விலையில் உரம் விற்பனை செய்வதை உறுதி செய்திட வேண்டும். மேலும் தனியார் கடைகளில் விவசாயிகள் பார்வையில் படும்படி விலைப்பட்டியலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.