அய்யம்பேட்டை பகுதியில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

அய்யம்பேட்டை பகுதியில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
Published on

அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம் கிராமத்தில் சீனிவாசன் என்ற விவசாயி தனது வயலில் மாப்பிள்ளை சம்பா நெல் சாகுபடி செய்துள்ளார். இந்த நெல் பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றாகும். இந்த வயலில் பயிரிடப்பட்டுள்ள மாப்பிள்ளை சம்பா நெற்பயிர் ஒரு ஆள் உயரத்துக்கு வளர்ந்து மக்களை கவர்ந்து வருகிறது.

ஆள் உயரத்துக்கு வளர்ந்துள்ள இந்த பயிரை காண பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் விவசாயிகள் வந்த வண்ணம் உள்ளனர். மாப்பிள்ளை சம்பாவை பயிரிடும் முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகள் சீனிவாசனிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்ய விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்து வரு கிறது.

இதுகுறித்து விவசாயி சீனிவாசன் கூறியதாவது:-

வளமான மண்

நான் நீண்ட காலமாக பல்வேறு நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறேன். தற்காலத்தில் ஒரு ஏக்கர் நெல் நடவு செய்ய விதை, உழவு, உரம், கூலி ஆட்கள் என ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை பயன்படுத்துவதால் நிலத்துக்கு தீங்கு ஏற்படுகிறது. எதிர்கால சந்ததியினருக்கு வளமான மண்ணை விட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த போது தான் பராம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா நெல் பற்றி அறிந்தேன்.

உடனே 20 கிலோ விதை நெல் வாங்கி நாற்றங்கால் தயார் செய்து விதை தெளித்தேன். 15 நாட்களிலேயே நாற்று நன்கு வளர்ந்து 30 நாள் பயிர் போல காட்சி அளித்தது. அதனை பறித்து எந்திரம் மூலம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்தேன். இந்த வயலில் எந்த வித ரசாயன உரமோ, பூச்சி மருந்தோ பயன்படுத்தவில்லை. இந்த பயிர் சீக்கிரமாக வளர்ந்து விடுவதால் களை பறிக்க வேண்டிய வேலையும் கிடையாது.

குறைந்த அளவு தண்ணீர்

இந்த பயிருக்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. ரூ.5 ஆயிரம் மட்டுமே செலவானது. தற்போது இந்த நெற்பயிர் சுமார் 6 அடி வரை செழிப்பாக வளர்ந்து உள்ளது. மற்ற நெற்பயிரை போல நெல் மணிகளும் அடர்த்தியாக உள்ளது. வைக்கோலும் 3 மடங்கு அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆள் உயரம் வளர்ந்துள்ள நெற்பயிரை விவசாயிகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இந்த நெல் நோய் எதிர்ப்பு திறன் கொண்டது என்பதால் விவசாயிகள் இப்போதே விதை நெல்லுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். இதனால் இந்த நெல்லுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com