கடையம்,
கடையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கடையம், கீழக்கடையம், செக்கடியூர், புறங்காட்டான் புலியூர், அங்கப்பபுரம், நரையப்பபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எலுமிச்சை, நெல்லி, நார்த்தை, கறிவேப்பிலை, வாழை, தென்னை உள்பட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
இதில் கீழக்கடையம் பகுதி விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கி வரும் டிரான்ஸ்பார்மர் பழுதானது. இதனால் அடிக்கடி மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்தம் காணப்படுவதால் விவசாயத்திற்குதண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனேவே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் விவசாயம் சரிவர விவசாயிகள் செய்ய முடியவில்லை. மேலும் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் கடையம் கட்டேறிப்பட்டி துணை மின்நிலையத்திற்கு வந்து பல மாதங்கள் ஆகியும், அருகில் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கீழக்கடையம் பகுதிக்கு டிரான்ஸ்பார்மரை மாற்றவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே விவசாயிகள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.