விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்தி நல்ல விலை கிடைக்க செய்ய வேண்டும்

விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விளை பொருட்களை சந்தைப்படுத்தி நல்ல விலை கிடைக்க செய்ய வேண்டும் என்று வருவாய்த்துறை தலைமை கண்காணிப்பு முன்னாள் ஆணையர் கூறினார்.
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் திருவோணத்தை அடுத்த தெற்கு கோட்டையில் சித்திரை பட்டத்திற்கேற்ற உயர் விளைச்சல் தரும் உளுந்து ரகங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி தலைமை தாங்கினார். வருவாய்த்துறை தலைமை கண்காணிப்பு முன்னாள் ஆணையர் வேதநாராயணன் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் துணைவேந்தர் ராமசாமி பேசுகையில், மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு தன்மையுடைய புதியரகங்களை பயிரிட வேண்டும். நீர் பாசனத்துக்குரிய சூரிய நீர் இறைப்பானுக்கு அரசு மானியம் வழங்குகிறதுஎன்றார்.

வருவாய்த்துறை தலைமை கண்காணிப்பு முன்னாள் ஆணையர் வேதநாராயணன் பேசுகையில், பயிர் சாகுபடி செலவு அதிகமாகவும், விளைபொருளின் விலை குறைவதும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விளை பொருட்களை மொத்தமாக சந்தைபடுத்தி நல்ல விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்என்றார்.

பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் கணேசமூர்த்தி பேசுகையில், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட உளுந்து ரகமான வம்பன் 6 மற்றும் வம்பன் 8 ரகங்களுக்கான ஆதார மற்றும் சான்று விதைகள், மத்திய வேளாண்மை கழகத்தின் மூலமாக விதை குழுமத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறதுஎன்றார்.

பின்னர் விவசாயி தண்டபாணி பயிரிட்டுள்ள வம்பன் 6 ரக உளுந்து பயிரை, அதிகாரிகள், விவசாயிகள் பார்வையிட்டனர். கருத்தரங்கில் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ரவி, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் கணேசமூர்த்தி, தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார், ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வர் சாமிஅய்யன், பேராசிரியர் மணிவண்ணன் மற்றும் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com