போலீசுக்கு பயந்து தலைமறைவான கணவர் கர்நாடகாவில் தற்கொலை

குமரி பேராசிரியையை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவான கணவர் கர்நாடகாவில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
Published on

அஞ்சுகிராமம்,

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரத்தை சேர்ந்தவர் டால்டன் செல்வ எட்வர்ட் (வயது 40), வக்கீல். இவருடைய மனைவி ஜெகதீஷ் ஷைனி (33). இவர்களுக்கு ஆதவன் (4) என்ற மகனும், ஆதிரை (2) என்ற மகளும் உள்ளனர்.

ஜெகதீஷ் ஷைனி, பால்குளத்தில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர், குமரி மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் ஜெகநாதனின் தங்கை ஆவார்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜெகதீஷ் ஷைனி சில மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். பின்னர், உறவினர்கள் கணவன்-மனைவி இருவரையும் சமரசம் செய்து சேர்த்து வைத்தனர்.

அதன் பிறகும் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் அவர்களுக்கிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் டால்டன் செல்வ எட்வர்ட் ஆவேசத்துடன், மனைவி என்றும் பாராமல் ஜெகதீஷ் ஷைனியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

தீவிர சிகிச்சை

படுகாயமடைந்த ஜெகதீஷ் ஷைனி உயிருக்காக போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த வாலிபர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் டால்டன் செல்வ எட்வர்ட் அரிவாளுடன் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

வாலிபர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ஜெகதீஷ் ஷைனி தலையில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெகதீஷ் ஷைனியின் உறவினர்கள் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டால்டன் செல்வ எட்வர்டை தேடி வந்தனர். அவருடைய செல்போன் எங்கு உலா வருகிறது என்பதை தொழில்நுட்ப ரீதியாக கண்காணித்தனர். காவல் கிணறு பகுதியை தாண்டி சென்ற போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் போலீசாரால் அவரை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் போலீசார் அவர் எங்கு சென்றிருக்கலாம் என்று விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 7 மணியளவில் கர்நாடக மாநிலம் மண்டியா அருகில் உள்ள எலியூர் பகுதி ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக அங்குள்ள போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டனர்.

அப்போது, பிணமாக கிடந்தவரின் சட்டை பையை சோதனை செய்தனர். அதில் பார் கவுன்சில் அடையாள அட்டை இருந்தது. அந்த முகவரியை வைத்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற டால்டன் செல்வ எட்வர்ட், அங்கு பிணமாக கிடந்தது தெரியவந்தது. குடும்ப தகராறில் மனைவியை வெட்டிய அவர் போலீசுக்கு பயந்து கர்நாடகா மாநிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஆவேசத்தில் தான் செய்த தவறை உணர்ந்து மனம் வெதும்பி உள்ளார்.

மேலும் தன்னை போலீசார் பிடித்து ஜெயிலில் தள்ளி விடுவார்களோ என்ற பயம் அவருக்கு ஏற்பட்டது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் அங்குமிங்கும் சுற்றி திரிந்த அவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அஞ்சுகிராமம் போலீசார் டால்டன் செல்வ எட்வர்டின் உறவினர்களை அழைத்துக் கொண்டு கர்நாடகா மாநிலம் விரைந்துள்ளனர். அங்கு சென்று அவருடைய உடலை கொண்டு வருவதற்காக முயற்சியில் போலீசார் ஈடுபட உள்ளனர். மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவான கணவர் கர்நாடகாவில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com