தாம்பரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி விஜய்குமார் - பொதுமக்கள் அதிர்ச்சி

தாம்பரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி விஜய்குமார் பெயர், புகைப்படத்துடன் இடம்பெற்று இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தாம்பரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி விஜய்குமார் - பொதுமக்கள் அதிர்ச்சி
Published on

தாம்பரம்,

தமிழகம் முழுவதும் வருகிற 23-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும், பெயர் நீக்கம் செய்திடவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டனர். இந்த முகாம் வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளிலும் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் கார்லி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் தாம்பரம் நகராட்சி பழைய வார்டு எண் 26-ல் உள்ள வாக்காளர் பெயர்களை சரிபார்க்கும்போது, அங்குள்ள நடுத்தெரு முகவரியில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியும், தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக பணியாற்றுபவருமான விஜய்குமாரின் புகைப்படம், அவருடைய தந்தை பெயருடன் இடம் பெற்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதில், விஜய்குமார், தந்தை பெயர் கிருஷ்ணன், வீட்டு எண்-1, வயது 67 என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அவருடைய தந்தை பெயர் கிருஷ்ணன் நாயர் என்பதற்கு பதிலாக கிருஷ்ணன் என இடம் பெற்றுள்ளது.

நாட்டின் பிற பகுதிகளில் வசித்த விஜய்குமார், எப்போது தாம்பரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் ஆனார்? என தெரியவில்லை. இதுபோல வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com