மாரியம்மன் கோவில்களில் திருவிழா திரளான பக்தர்கள் பால்குட ஊர்வலம்

திருச்சியில் மாரியம்மன் கோவில்களில் நடைபெறும் திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
Published on

திருச்சி,

திருச்சி முதலியார் சத்திரம் முத்து மாரியம்மன் கோவில் கரக உற்சவ விழா மற்றும் பூச்சொரிதல் விழா கடந்த 8-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காவிரி ஆறு அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து பக்தர்கள் பால் குடம், இளநீர் காவடி, அக்னி சட்டி, அலகு காவடிகள் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

மேலும் சில பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புத்தூர் மகாமாரியம்மன் கோவில்

இதேபோல புத்தூர் புதுத்தெருவில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவிலில் 75-ம் ஆண்டாக பால்காவடி விழா நேற்று நடந்தது. இதையொட்டி மாலையில் காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி, கரகம், அக்னி சட்டியுடன் புறப்பட்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவில் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடைபெறும்.

ஓம் சக்தி மாரியம்மன் கோவில்

கருமண்டபம் ஓம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு குத்து விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று மாலை 6 மணிக்கு அம்மனுக்கு மாவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டுதலும் நடைபெற உள்ளது. வருகிற 19-ந் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது.

கோப்பு மகா மாரியம்மன் கோவில்

ஜீயபுரம் அருகே உள்ள கோப்பு மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கடந்த மாதம் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று இரவு மாரியம்மனை கும்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) இரவு படுகள பூஜையுடன் திருவிழா தொடங்குகிறது. அதனை தொடர்ந்து நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் 20-ந்தேதி வரை தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 21-ந் தேதி மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. 22-ந் தேதி கிடாவெட்டும் நிகழ்ச்சியும், அன்று இரவு அம்மன் முத்து பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 23-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.

குளுமை பூஜை விழா

தா.பேட்டை பிள்ளாதுறை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் குளுமை பூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் செவந்தாம்பட்டி மதுரைவீரன் சுவாமி கோவிலில் இருந்து மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மன் நிலையில் ஊற்றினர். அப்போது மழைவேண்டியும், விவசாயம் செழிக்கவும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், வியாபாரம் மேன்மை அடையவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் பாவோடித்திடலில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பெரிய பாத்திரங்களில் கம்மங்கூழ் நிரப்பி வைக்கப்பட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது வீரமலையாண்டி, வண்டித்துரை, சடாமுனி, உக்கிராண்டி, மதுரைவீரன் சுவாமிகளுக்கு படையலிட்டு வழிபாடுகள் நடைபெற்றது. பூஜை முடிவில் பக்தர்களுக்கு கம்மங்கூழ், நீர்மோர், பானகம், துள்ளுமாவு, பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சந்தைபேட்டை அருகே அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் பிள்ளையார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குளுமை பூஜை விழா நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com