வாஷிங்டன்,
சீனாவில் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி விட்டது.
அமெரிக்காவில் இந்த நோய்க்கு முதல் முறையாக உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. வாஷிங்டன் மாகாணம் கிங் பகுதியை சேர்ந்த 55 வயதான ஒரு பெண் பலியானார். அவருக்கு எப்படி இந்த நோய் தொற்றியது என்று தெரியவில்லை. இந்த தகவலை வாஷிங்டன் மாகாண கவர்னர் ஜே இன்ஸ்லீ தெரிவித்தார்.
மாகாணம் முழுவதும் அவர் அவசர நிலையை அறிவித்தார். அரசு அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கொரோனா வைரசுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
துரதிருஷ்டவசமாக, கொரோனா வைரசுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். அவர் ஒரு அற்புதமான பெண்மணி. அமெரிக்காவில் மேலும் பலருக்கும் நோய் பரவக்கூடும். ஆரோக்கியமானவர்கள் முற்றிலும் குணமடைவார்கள்.
யாரும் பீதி அடைய வேண்டாம். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாடு தயாராக உள்ளது. அரசின் பல்வேறு துறைகள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன. இது கடினமான பணிதான். ஆனால் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த தென்பகுதி எல்லையை மூட பரிசீலித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
பேட்டியின்போது, அருகில் இருந்த துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், நோய் பரவலை கட்டுப்படுத்த டிரம்ப் பயண கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக கூறினார். கடந்த 14 நாட்களில் ஈரானுக்கு சென்ற வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய டிரம்ப் தடை விதித்துள்ளதாக அவர் கூறினார்.
அதுபோல், தென்கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளில் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களை டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, சீனாவில் மேலும் 35 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 870 ஆக உயர்ந்துள்ளது.