ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீன்பிடி தொழில் விறுவிறுப்பு - அதிகளவில் மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீன்பிடி தொழில் விறுவிறுப்படைந்து உள்ளது. மீன்கள் அதிகளவில் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Published on

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் கடந்த மாதம் முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பல்வேறு தொழில்கள் இன்னும் முழுவீச்சில் நடைபெறவில்லை.

மீன்பிடி தொழிலை பொறுத்தவரை சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

சூரை மீன்கள்

தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் நேற்று காலையில் கரைக்கு திரும்பினர். அவர்கள் வலையில் அதிக அளவில் சூரை மீன்கள் பிடிபட்டு இருந்தன. அதேபோன்று ஊளி, முரள், திருக்கை, மயில் மீன்களும் அதிகளவில் பிடிபட்டன.

மேலும் மீன்களுக்கும் நல்ல விலை கிடைத்து வருகிறது. ஒரு கிலோ சீலா மீன் ரூ.400-க்கும், ஊளி ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 50 கிலோ முதல் 150 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான மீன்களும் பிடிபட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நல்ல விலை

இதுகுறித்து மீன் வியாபாரி பக்ருதீன் கூறியதாவது:-

தருவைகுளம் பகுதியில் மீன்கள் ஓரளவுக்கு பிடிபட்டு வருகின்றன. தற்போதுதான் சூரை மீன்கள் பிடிபட தொடங்கி உள்ளன. அடுத்த வாரத்தில் இதன் வரத்து அதிகரிக்கும். ஊரடங்கு காலமாக இருந்தாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், மீன்பிடி தொழில் விறுவிறுப்படைந்து உள்ளது.

ஒரு கிலோ கட்ட முரள் ரூ.320-க்கும், ஊளி ரூ.350-க்கும், சீலா ரூ.400-க்கும், வாளை முரள் ரூ.220-க்கும், கலிங்கன் ரூ.350-க்கும், பெரிய விளமீன் ரூ.280-க்கும், சிறிய விளமீன் ரூ.120-க்கும், கருப்பு நகரை ரூ.130-க்கும் விற்பனையாகி உள்ளன. மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு மீன்கள் போதுமான அளவுக்கு பிடிபட்டு வருகின்றன. விலையும் நன்றாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com