திருவனந்தபுரம்
இந்தியாவில் பல்வேறு முகாம்களில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் 40 ஆயிரம் பேரை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளது. ரோஹிங்யாக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்துள்ளார்கள். அவர்கள் தொடர்பாக தகவல்களை சேகரிக்க எல்லா மாநிலங்களிடமும் கேட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 14 ஆயிரம் ரோஹிங்யாக்கள் மட்டுமே ஐ.நா. விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹிங்யா அகதிகளின் பயோமெட்ரிக் தகவல்கள் விரைவில் மியான்மாருக்கு அனுப்பப்படும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதற்கிடையே இந்தியாவில் உள்ள ரோஹிங்யாக்கள் பெருமளவு கேரளா மாநிலத்திற்கு இடம்பெயர்கிறார்கள் என தகவல்கள் வெளியாகியது. ரெயில் மூலமாக பெரும் இடம்பெயர்வு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் விழிஞ்சம் பகுதியில் 5 ரோஹிங்யாக்களை போலீஸ் கைது செய்துள்ளது. 4 பெரியவர்கள், ஒரு குழந்தை அடங்கிய குடும்பத்தை போலீஸ் பிடித்துள்ளது. அவர்கள் ஐ.நா. சபையால் வழங்கப்பட்ட அகதிகளுக்கான உரிமம் பெற்றுள்ளனர், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையை எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஐதராபாத்திலிருந்து அங்கு சென்றுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே போலீஸ், மாநில உளவுத்துறை தொடர்ந்து கண்காணிப்பை அதிகரித்து வருகிறது.