கரூர்,
கரூரை அடுத்த டி.செல்லாண்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீர் தாந்தோணிமலை ராஜவாய்க்காலில் அடிக்கடி திறந்துவிடப்படுகிறது என்று விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். தற்போது அமராவதி ஆற்றில் தண்ணீர் செல்வதால் தாந்தோணிமலை ராஜவாய்க்காலிலும் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு முதல் வாய்க்காலில் அப்பகுதியில் இயங்கி வரும் சாயப்பட்டறைகளின் சாயக்கழிவுநீரை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி விவசாயிகள் தாந்தோணிமலை ராஜவாய்க்காலுக்கு சாயக்கழிவு நீர் வருவதை அடைத்தனர்.
இதனால் சாயக்கழிவு நீர் செல்ல வழியின்றி அப்பகுதியில் உள்ள சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சாயக்கழிவுநீர் கிணறுகளில் இறங்கி நீராதாரத்தை பாதிக்குமோ என்ற அச்சத்தில் கரூர்- சுக்காலியூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஒன்று திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், சாயக்கழிவை திறந்துவிட்ட சாயப்பட்டறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் இனிமேல் வாய்க்காலில் சாயக்கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து சாலையில் தேங்கிய கழிவு நீரை அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கலக்கும் வகையில், பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.