4 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்

நெல்லை மாவட்டத்தில் 4 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.
Published on

நெல்லை,

தமிழக அரசு சார்பில் பொங்கல் விழாவையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்துக்கான பொங்கல் பரிசு தொகுப்பு தொடக்க நிகழ்ச்சி பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள ரேஷன் கடையில் நேற்று நடைபெற்றது.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி பேசும்போது கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, தமிழக மக்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முந்திரி 20 கிராம், உலர்ந்த திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5, கரும்புத்துண்டு 2 அடி மற்றும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. மேலும் இதற்கென்று வடிவமைக்கப்பட்ட துணிப்பையும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.2,393 கோடி செலவில் வழங்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 788 ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4 லட்சத்து 56 ஆயிரத்து 543 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.48.16 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இதனை பெற்று தைப்பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை சந்திப்பு கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பிரியதர்ஷினி, துணைப்பதிவாளர் முத்துசாமி, பாளையங்கோட்டை தாசில்தார் தாஸ்பிரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com