தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிக்கு: மத்திய அரசிடம் நிதியை வாதாடி, போராடி தான் பெற வேண்டும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேட்டி

தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிக்கு வேண்டிய நிதியை மத்திய அரசிடம் வாதாடி, போராடி தான் பெற வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கூறினார்.
தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிக்கு: மத்திய அரசிடம் நிதியை வாதாடி, போராடி தான் பெற வேண்டும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேட்டி
Published on

காட்பாடி,

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கின் போது வீடுகளில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மின் கட்டண குளறுபடியை கண்டித்து தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி காட்பாடி காந்திநகரில் வசிக்கும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ., தன்னுடைய வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கதிர்ஆனந்த் எம்.பி., வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் துரைமுருகன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மின்சார குளறுபடிக்கு காரணமே அமைச்சர் தங்கமணி தான். அவர் குழம்பிப் போயுள்ளார். மக்களை குழப்ப வேண்டாம். கவர்னரே இல்லாத அரசு மாநிலத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் லட்சியம்.

இந்தியாவின் அரசியல் வரலாற்றில் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. கவர்னர் தான் ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை கையில் வைத்திருக்கிறார் என்பது அபத்தம் என்பதை புதுச்சேரி சுட்டிக் காட்டியிருக்கிறது.

அனைத்து உரிமைகளையும் மாநில அரசு மத்திய அரசிடம் கொடுத்துவிட்டது. நீட் தேர்வில் அவர்கள் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி உள்ளனரா?. அதுபோலத்தான் கல்வியிலும் மாநில அரசு மத்திய அரசிடம் சரண்டர் ஆகிவிட்டது.

மத்திய அரசை பொருத்தவரை திராவிட இயக்க கொள்கைக்கு எதிரான கருத்தை உடைய அரசு. பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதெல்லாம் பா.ஜ.க.வின் சிந்தனையில் கிடையாது. அவர்களுக்கு தெரிந்தது இந்துத்துவா தான். அதை தவிர வேறு ஒன்றும் கிடையாது. எனவே அதனை முதன்மைப்படுத்த எல்லாம் செய்வார்கள்.

கொரோனா நிவாரண நிதியை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கவில்லை. அதனால் தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிக்கு நிதி இல்லை என முதல்-அமைச்சர் கூறுகிறார். நம்முடைய நிதி அமைச்சர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. எந்த காலத்திலும் மத்திய அரசு நிதியை தானாக கொட்டிக் கொடுக்காது. நாம்தான் வாதாடி, போராடி பெற வேண்டும்.

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட கந்தசஷ்டி விவகாரத்திற்கும் தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com