காரில் வேகமாக சென்றதற்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்திய வைர வியாபாரி

காரில் வேகமாக சென்றதற்காக வைர வியாபாரி ஒருவர் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்திய வினோத சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது.
Published on

மும்பை,

மும்பையில் முக்கிய சாலைகள் உள்பட பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதன் மூலம் விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதன்படி அபராதம் விதிக்கப்படும் வாகனத்தின் உரிமையாளருக்கு அதுகுறித்த விவரம் குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

ஆனால் பலர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சரியான செல்போன் எண்ணை கொடுக்காததால் இந்த தகவல்கள் வாகன உரிமையாளருக்கு கிடைப்பது இல்லை. இந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மும்பை போக்குவரத்து போலீசாருக்கு ரூ.120 கோடி அபராதம் வசூலாகாமல் உள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று மும்பை கல்பாதேவி பகுதியில் நோ பார்க்கிங் பகுதியில் ஹோண்டா கா ஒன்று நின்றுகொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து போலீஸ்காரர் சுனில் பாட்டீல் அந்த காருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்தார். எனவே அவர் காரின் பதிவு எண்ணை இ-செல்லான் கருவியில் அழுத்தினார்.

அப்போது அந்த காரின் உரிமையாளர் போக்குவரத்து போலீசாருக்கு ரூ.85 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டி இருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் அந்த காரை கல்பாதேவி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

மேலும் இதுகுறித்து நடத்திய விசாரணையில், காரின் உரிமையாளர் மலபார்ஹில் பகுதியை சேர்ந்த வைர வியாபாரி ராகில் மேத்தா என்பது தெரியவந்தது. அவருக்கு இந்த காரை தவிர பி.எம். டபிள்யு காரும் உள்ளது. இதில் அவர் போலீசாரிடம் சிக்கிய ஹோண்டா நிறுவன காரில் 84 முறை பாந்திரா - ஒர்லி கடல் மேம்பாலத்தில் விதிகளை மீறி 100 கி.மீ. வேகத்திற்கு மேல் சென்று உள்ளார். பாந்திரா - ஒர்லி கடல் மேம்பாலத்தில் வாகனங்கள் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். இதற்காகத்தான் அவரது காருக்கு ரூ.85 ஆயிரம் அபராதம் விதித்து இருந்தது தெரியவந்தது.

இதுதவிர அவர் பி.எம்.டபிள்யு. காரில் 19 முறை பாந்திரா ஒர்லி கடல் மேம்பாலத்தில் விதிகளை மீறி வேகமாக சென்று உள்ளார். காரில் வேகமாக சென்றதற்காக போலீசார் அவருக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் (2 கார்களுக்கும் சேர்த்து) அபராதம் விதித்து உள்ளனர். அவர்கள் இதுகுறித்த தகவலை வைர வியாபாரியின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பியதாக தெரிவித்தனர். ஆனால் வைர வியாபாரி அப்படி தகவல் எதுவும் வரவில்லை என கூறினார்.

இந்தநிலையில் போக்குவரத்து போலீசார் அபராத தொகை ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்தை செலுத்திவிட்டு பறிமுதல் செய்யப்பட்ட காரை எடுத்து செல்லுமாறு வைர வியாபாரிக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதையடுத்து அவர் அபராதத்தை செலுத்தி காரை எடுத்து சென்றார்.

வைர வியாபாரி ஒருவர் காரில் வேகமாக சென்றதற்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்திய சம்பவம் பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:-

தற்போது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விதிமுறை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகிறோம். ஆனால் வட்டார போக்குவரத்தில் உள்ள தகவல்கள் மூலம் பெரும்பாலான வாகன ஓட்டிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனினும் விதிமுறை மீறி அபராதம் விதிக்கப்பட்டவர்கள் நேரடியாக போக்குவரத்து போலீசாரிடம் சிக்கும் போது பழைய பாக்கியை வசூலித்து விடுவோம்.

வாகன ஓட்டிகள் இதில் இருந்து தப்பிக்க மும்பை போக்குவரத்து போலீஸ் (எம்.டி.பி.) செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் அவர்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்பட்டு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அபராதம் விதிக்கப்பட்டு இருந்தால் அதை ஆன்லைனிலேயே செலுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com