குடியாத்தம்,
குடியாத்தத்தில் இருந்து காட்பாடி செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. தற்போது சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக சாலையின் இருபுறமும் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
மேலும் சில இடங்களில் கல்வெட்டு அமைப்பதற்காக சாலையையொட்டி பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. கே.வி.குப்பம் அருகே கொசவன்புதூர் பகுதியில் இதேபோல் கல்வெட்டு அமைப்பதற்காக சாலையின் இருபுறமும் பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் எச்சரிக்கை பலகையோ, பெரிய அளவிலான தடுப்புகளோ எதுவும் முறையாக இல்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் விபத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது.
அதுவும் இரவு நேரங்களில் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிடும் வகையில் சாலையின் ஓரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிறிய அளவிலான பள்ளங்களில் விழுந்து எழுந்து செல்கின்றனர். தற்போது கல்வெட்டிற்காக பெரிய அளவில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் முறையான தடுப்புகள் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. பலமுறை விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் குடியாத்தம் அருகே ராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்த மின்ஊழியர் கோபி என்பவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் கே.வி.குப்பம் நோக்கி சென்றுள்ளார். அப்போது கொசவன்புதூர் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடும்போது சாலையோரம் இருந்த மணல் மூட்டை மீது மோதி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சாலையில் தோண்டப்பட்டுள்ள பெரிய அளவிலான பள்ளங்கள் முன்பு எச்சரிக்கை பலகையும், பாதுகாப்பான முறையில் தடுப்புகளையும் அமைத்து நெடுஞ்சாலை துறையினர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.