தொடர்ந்து 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டும் வீராணம் ஏரி

வீராணம் ஏரி தொடர்ந்து 2-வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டுகிறது. இந்த நிலையில் கீழணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று முதல் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டும் வீராணம் ஏரி
Published on

காட்டுமன்னார்கோவில்,

காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் கடலூர் மாவட்டத்தில், லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியின் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருவது வழக்கம்.

இதை தவிர்த்து மழைக்காலங்களில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீர், செங்கால், வெண்ணங்குழி, கருவாட்டு ஓடைகள் வழியாக தண்ணீர் வரத்து இருக்கும். கடைமடை விளைநிலங்களில் பாசனத்தோடு மட்டும் நின்றுவிடாமல், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது, தினசரி வினாடிக்கு 76 கனஅடி நீர் சென்னைக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

சம்பா சாகுபடி

கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கல்லணை வழியாக கீழணையை வந்தடைந்தது. 9 அடி கொள்ளளவு கொண்ட கீழணையும் அதன் முழு கொள்ளளவை எட்டியதால், அங்கிருந்து வீராணத்துக்கு வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் வரத்து காரணமாக, வறண்டு கிடந்த வீராணம் ஏரி வேகமாக நிரம்பி, அதன் முழுகொள்ளளவை எட்டியது.

இதை தொடர்ந்து ஏரியை சார்ந்துள்ள விவசாயிகளும் சம்பா சாகுபடியை தொடங்கினார்கள். பாசனத்துக்கும் தேவையான அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியதால், அதற்கேற்ப கீழணையில் இருந்து அவ்வப்போது ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

2-வது முறையாக முழு கொள்ளளவு

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாக குறைந்தது. இதையடுத்து 18-ந்தேதி முதல் கீழணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 700 கனஅடி நீர் வடவாறு வழியாக திறக்கப்பட்டது. நீர் வரத்து காரணமாக ஏரியின் நீர்மட்டம் மெல்ல உயர தொடங்கி, நேற்று 46.15 கன அடியாக உயர்ந்தது. இதையடுத்து கீழணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 700 கன அடியாக குறைக்கப்பட்டது.

நேற்று சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. பாசனத்திற்காக வினாடிக்கு 54 கனஅடி நீர் திறந்து விடப்பட்டிருந்தது. நீர் வரத்து தொடர்ந்து இதே நிலையில் நீடித்தால் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை மீண்டும் எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு 2-வது முறையாக ஏரி அதன் முழு கொள்ளவை எட்ட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தண்ணீர் குறைப்பு

இதற்கிடையே நீர் வரத்து குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 9 அடி கொள்ளளவு கொண்ட கீழணையில் 8 அடியில் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில் கல்லணையில் இருந்து கீழணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வழங்கப்பட்டுவந்தது. இதன்காரணமாக, வீராணம் ஏரிக்கு வினாடிக்கு ஆயிரத்து 700 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கல்லணையில் இருந்து கீழணைக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று 750 கனஅடியாக குறைக்கப்பட்டது. எனவே வீராணம் ஏரிக்கு வழங்கப்பட்ட நீரின் அளவும் குறைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com