கடந்த 5 ஆண்டுகளாக மோடி, தமிழகத்துக்கு செய்த வஞ்சகம் அதிகம் - வைகோ குற்றச்சாட்டு

கடந்த 5 ஆண்டுகளாக மோடி, தமிழகத்துக்கு செய்த வஞ்சகம் அதிகம் என சென்னிமலையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி பேசினார்.
Published on

சென்னிமலை,

தி.மு.க. கூட்டணி சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அ.கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளையர்களை எதிர்த்து போராடிய தியாகி குமரன் பிறந்த ஊர் இது. காந்தியை உலகமே போற்றுகிறது. காந்தி தேசம் என்று பெயர் வைக்க சொன்னவர் பெரியார். அவரது சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளது வேதனையை தருகிறது. காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவிற்கு சிலர் சிலை வைக்கிறார்கள். இதை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டாமா?. மத நல்லிணக்கத்தை பற்றி பேசினால் சுடுவோம் என்கிறார்கள். மத நல்லிணக்கத்தை அழிக்க கூடாது.

கடந்த 5 ஆண்டுகளாக மோடி தமிழகத்திற்கு செய்த வஞ்சகம் அதிகம். தமிழகத்துக்கு எதிரான திட்டங்களையே நிறைவேற்றி வருகிறார். விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைத்தல், கெயில் திட்டம் போன்றவற்றால் விவசாயம் முற்றிலும் அழியும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்களும், மத்திய அரசும் தான் லாபம் பெறுகின்றன. விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

தேனி மாவட்டத்தில் கொண்டு வரப்பட்ட நியூட்ரினோ திட்டத்தால் அந்த மாவட்டம் முழுவதும் அழியும். மேகதாது, முல்லைப்பெரியாரில் அணைகள் கட்ட மறைமுகமாக அனுமதி கொடுத்தது மத்திய அரசு தான்.

ஜப்பான், தென்கொரியா போன்ற வெளிநாடுகளின் கம்பெனிகளில் இருந்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை. இதனால் அந்த நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்றுவிட்டதால் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோனது. தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பண மோசடியும் அதிகரித்துள்ளது. 23 தொழில் அதிபர்கள் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளனர். சிலர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டனர்.

ஆனால் உரிமைகளை கேட்பவர்கள் ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர். ஜி.எஸ்.டி.யால் வணிகம் அடியோடு அழிந்துவிட்டது. போர் விமானம் வாங்கியதில் ஊழல் செய்துள்ளனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கல்வி கடன், விவசாய கடன் தள்ளுபடி, கல்வி மாநில பட்டியலுக்கு மாறும் என்று கூறியுள்ளனர். இந்த நலத்திட்டங்களை பெற தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்திக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு வைகோ கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com