முத்தலாக் தடை மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அரசிதழில் வெளியிடப்பட்டது

முத்தலாக் தடை மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, அது சட்டமானது. அரசிதழில் வெளியிடப்பட்டது.
Published on

புதுடெல்லி,

திருமணமான முஸ்லிம் ஆண், தன்னுடைய மனைவியை மூன்று தடவை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை நிலவி வந்தது. சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்பேரில், முத்தலாக்கை தடை செய்ய கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது.

ஆனால், மக்களவையில் நிறைவேறியபோதிலும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறவில்லை. இருப்பினும், முத்தலாக்கை தடை செய்து கடந்த பிப்ரவரி 21-ந் தேதி அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.

மீண்டும் ஆட்சியை பிடித்தநிலையில், முத்தலாக் மசோதாவை மோடி அரசு மீண்டும் கொண்டு வந்தது. கடந்த மாதம் 25-ந் தேதி, மக்களவையில் அந்த மசோதா நிறைவேறியது.

கடந்த 30-ந் தேதி, மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அன்று இரவு நடந்த வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் சபைக்கு வரவில்லை. வேறு சிலர் வெளிநடப்பு செய்தனர். இதனால், மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் விழுந்தன. அங்கும் மசோதா நிறைவேறியது.

இரு அவைகளிலும் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியதை தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அதனால், மசோதா, சட்டம் ஆகியுள்ளது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் முடிவுக்கு வந்து, அதற்கு பதிலாக இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, அரசிதழில் மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதில், ஜனாதிபதி ஒப்புதல் அளித்த தகவல் இடம்பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 3 தடவை தலாக் சொல்லி விவாகரத்து செய்வது செல்லாது, சட்ட விரோதமானது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முஸ்லிம் ஆண், தன்னுடைய மனைவியிடம் எழுத்துமூலமாகவோ, வாய்மொழியாகவோ அல்லது எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு தகவல்கள் மூலமாகவோ முத்தலாக் சொல்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அப்படி சொல்வது செல்லாது, சட்ட விரோதமானது.

அதற்காக, சம்பந்தப்பட்ட ஆணுக்கு 3 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், பாதிக்கப்பட்ட மனைவியோ அல்லது அவரது ரத்த சம்பந்தப்பட்ட உறவினரோ புகார் அளித்தால்தான், சம்பந்தப்பட்ட ஆண் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவரை வாரண்ட் இன்றி கைது செய்ய போலீஸ் அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

அந்த ஆணுக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் கருத்தை கேட்ட பிறகே அதுபற்றி மாஜிஸ்திரேட் முடிவு செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண், தனக்கும், தன் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் கேட்க இந்த சட்டப்படி உரிமை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com