தனியார் நிறுவனத்தில் பங்குதாரர்களாக சேர்ப்பதாக கூறி, இருசக்கர வாகன பழுது பார்ப்பவர்களிடம் ரூ.50 லட்சம் மோசடி

தனியார் நிறுவனத்தில் பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்வதாக கூறி இருசக்கர வாகன பழுது பார்ப்பவர்களிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
தனியார் நிறுவனத்தில் பங்குதாரர்களாக சேர்ப்பதாக கூறி, இருசக்கர வாகன பழுது பார்ப்பவர்களிடம் ரூ.50 லட்சம் மோசடி
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று இருசக்கர வாகன பழுது பார்க்கும் தொழில் செய்து வரும் சம்பத், குமார், தீனதயாளன், ரமேஷ், சண்முகம், முருகன், சண்முகசுந்தரம், சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திண்டிவனத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இரண்டு சக்கர வாகன பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். அவர் எங்கள் அனைவரையும் சந்தித்து சென்னை முகப்பேர் பகுதியில் ஆட்டோ மொபைல் நிறுவனம் ஒன்று ரூ.32 லட்சத்திற்கு விலைக்கு வருவதாகவும், அந்த நிறுவனத்தை வாங்கி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பங்குதாரர்களாக செயல்பட்டு நல்ல லாபத்தை ஈட்டலாம் என்றார்.

இதை நம்பிய எங்கள் அனைவரிடமும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை அவர் பணம் வசூலித்தார். இதுதவிர தமிழகத்தின் பல இடங்களிலும் எங்களை போன்று இருசக்கர வாகன பழுது பார்ப்பவர்களிடம் அவர் பணம் வசூலித்தார். இவ்வாறாக மொத்தம் ரூ.50 லட்சத்தை ராஜேந்திரன் வசூலித்தார். நாங்கள் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் அவர் அந்த நிறுவனத்தை வாங்கவில்லை.

இதுபற்றி அவரிடம் சென்று கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. அப்படியானால் நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி கேட்டதற்கு அவர் பணத்தை தர முடியாது என்று கூறியதோடு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே எங்களை ஏமாற்றி பண மோசடி செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com