தடையில்லாத தாய்ப்பாலுக்கு...

தாய்ப்பால் கொடுத்தால் அழகு பாழ்பட்டுவிடும் என்ற மனநிலை கொண்டிருந்த தாய்மார்கள் குறைந்துவிட்டார்கள். அதே நேரத்தில் ‘தனது குழந்தையின் பசியைப் போக்க தங்களால் போதுமான அளவுக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியவில்லையே’ என்று வருந்துபவர்கள் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள்.
Published on

குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதின் அளவு குறைந்து போய்விடுகிறது. ஒரு சிலருக்கு தாய்ப்பால் சுரப்பு முற்றிலும் நின்றுபோய்விடுகிறது. தாய்ப்பால் சுரப்பு குறைந்து போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தை பிறப்பின்போது 500 மில்லி லிட்டருக்கு அதிகமாக ரத்தம் வெளியேறுவது தாய்ப்பால் சுரப்பை தாமதப்படுத்தும். கருப்பை பாதிப்பு, நீரிழிவு, தைராய்டு, ஹார்மோன் கோளாறுகள் போன்றவை தாய்பால் சுரப்பு குறைவதற்கு காரணமாக இருக்கலாம். மார்பகத்துக்குள் பால் உற்பத்தி செய்யும் சுரப்பி திசுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் தாய்ப்பால் அளவு குறைவதற்கு காரணமாகிவிடும். மார்பக அறுவை சிகிச்சை, மார்பகத்தில் ஏதேனும் பாதிப்பு எற்பட்டிருந்தாலும் தாய்ப்பால் அளவு குறைய தொடங்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டரிடம் கலந்தாலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது. அதுபற்றிய விவரம்:

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது இடை இடையே பாட்டிலில் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அது சீராக நடைபெற்று வரும் பால் சுரப்புக்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.

குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை பிறந்தபோது இருந்த எடையை விட சில நாட்களில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உடல் எடை குறைய தொடங்கும். சில குழந்தைகள் 10 சதவீதம் வரை எடையை இழக்கும். 10 நாட்களுக்கு பிறகு தினமும் 20 முதல் 30 கிராம் வரை எடை அதிகரிக்க தொடங்கும். இவ்வாறு எடை அதிகரிக்கவில்லை என்றால் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

வயிற்றுப்போக்கு, சிறுநீர் நிறம் மாறுதல், வாய் உலர்ந்து போகுதல், கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், சோர்வாக காட்சி அளித்தல், பால் குடிக்க தயங்குதல் போன்ற அறிகுறிகள் குழந்தையிடம் தென்பட்டால் குழந்தைக்கு நீரிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சூடு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை பெற வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு தினமும் 10 முதல் 12 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதாவது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒருசில உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் சிறந்த உணவாக பூண்டு கருதப்படுகிறது. அதனால் பாலூட்டும் தாய்மார்கள் அன்றாட உணவில் பூண்டுவை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல் பெருஞ்சீரகத்தையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பழுக்காத பச்சை பப்பாளியும் சாப்பிடலாம். அதிலிருக்கும் ஆக்ஸிடாஸின் பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும். பச்சை பப்பாளியை வேகவைத்து குழம்பாக தயார் செய்து சாப்பிடலாம்.

கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கும் வலுசேர்க்கும்.

கீரை வகைகளில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. அதனை நன்கு கழுவி வேகவைத்து சாப்பிட வேண்டும்.

வெந்தயத்திற்கும் பால் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு.

பாதாம், பிஸ்தா, வால்நெட், முந்திரி பருப்பு போன்றவைகளில் உள்ளடங்கி இருக்கும் செரோடோனின் பால் உற்பத்திக்கு உதவுகிறது.

சுரைக்காயில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான நீர்ச்சத்து நிரம்பி இருக்கிறது. இதனை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வரலாம்.

மீன் வகைகளில் ஒமேகா 3 அதிகம் உள்ளது. இது பால் சுரப்பை அதிகப்படுத்துவதோடு குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் உதவும்.

பாலூட்டும் தாய்மார்கள் அடிக்கடி பசியை உணர்வார்கள். அவக்கொடா அதற்கு நிவாரணம் தரும். அதிலிருக்கும் கொழுப்பு இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com