வாஷிங்டன்,
அமெரிக்காவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள் தங்கி இருந்து வேலை பார்ப்பதற்கு வழங்கப்படுகிற விசா எச் 1 பி விசா. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் எச் 1 பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்ற 20 ஆயிரம் பேருக்கு கூடுதலாக இந்த விசா வழங்கப்படும்.
எச் 1 பி விசாக்களில் 70 சதவீதத்துக்கும் மேலாக இந்தியர்களே பெறுகிறார்கள். அதாவது எச் 1 பி விசா மூலம் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் இந்தியர்களால் நடத்தப்படும் தொழில்நுட்ப நிறுவனங்களே அதிகம் பயன்பெறுகின்றன.
எச் 1 பி விசாக்களை பெறுவதற்கான நடைமுறைகளை கடுமையானதாக்க ஜனாதிபதி டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். அந்த வகையில் அவரது நிர்வாகம் எச் 1 பி விசாக்களை பெற புதிய நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு எச் 1 பி விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.