மும்பை,
வடமத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் பிரியா தத். மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் தத்தின் மகள் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராகவும் இருந்து வந்தார்.
இந்தநிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் சமீபத்தில் நடந்த பாரத் பந்தில், பிரியா தத் கலந்து கொள்ளாமல் ஷாப்பிங் சென்றதாக கூறப்படுகிறது. எனவே தான் அவரது பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்து உள்ளார்.
இதுகுறித்து பிரியா தத் கூறியதாவது:- நான் நீண்ட காலமாக தேசிய செயலாளராக இருந்து உள்ளேன். மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று என நினைக்கிறேன். வேறு ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் எனது பதவியை விட்டு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வட மத்திய மும்பை தொகுதியில் பிரியா தத்திற்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட நடிகை நக்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.