முன்னாள் ராணுவ வீரர், மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கோர்ட்டு வளாகம் முன்பு பொதுமக்கள் நூதன போராட்டம்

முன்னாள் ராணுவ வீரர், மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கோர்ட்டு வளாகம் முன்பு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமுல்லைவாயல் அந்தோணியார் நகரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 60). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ராஜாம்பாள்(55). கடந்த 27-6-2019 அன்று அவரது பக்கத்து வீட்டில் உள்ள 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அந்த சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சிறுமி மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் திருமுல்லைவாயல் போலீசில் புகார் அளித்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மாயமான சிறுமி வீட்டின் குளியலறையில் சாக்குமூட்டைக்குள் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் முன்னாள் ராணுவ வீரரான மீனாட்சி சுந்தரம் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார் என்பதும் அந்த சிறுமியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி அந்த வீட்டின் குளியல் அறையில் வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.

அவருக்கு உடந்தையாக மீனாட்சி சுந்தரத்தின் மனைவி ராஜாம்பாள் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது மனைவி ராஜாம்பாள் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக கணவன் மனைவி இருவரும் திருவள்ளூர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். இதை அறிந்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தின் முன்பாக கையில் பதாகைகளை ஏந்தியவாறு வாயில் கருப்பு துணியை கட்டி மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது மனைவி ராஜாம்மாள் ஆகியோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com