ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது: நண்பரின் சாவுக்கு பழிவாங்கும் விதமாக கொலை செய்தோம் - கைதானவர்கள் வாக்குமூலம்

முத்தியால்பேட்டை ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். நண்பரை கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது: நண்பரின் சாவுக்கு பழிவாங்கும் விதமாக கொலை செய்தோம் - கைதானவர்கள் வாக்குமூலம்
Published on

புதுச்சேரி,

முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பம் தெருவை சேர்ந்தவர் அன்புரஜினி (வயது 35). காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியான இவர் கடந்த 10ந் தேதி இரவு தனது நண்பர்கள் 4 பேருடன் காலாப்பட்டு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர்களுடன் காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

முத்தியால்பேட்டை பகுதியில் வந்த போது அவரை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் திடீரென அவரது காரின் முன்பக்கத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதனால் அதிர்ச்சியடைந்த அன்பு ரஜினி மற்றும் அவரது நண்பர்கள் காரில் இருந்து இறங்கி ஓட முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் அன்பு ரஜினியை சுற்றி வளைத்து கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் அவரது கூட்டாளிகள் சூர்யா, நிவாஸ், ஜெரோம், சந்துரு ஆகிய 5 பேரும் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் உத்தரவின் பேரில் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் குற்றவாளிகள் லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த ஸ்ரீராம், நிவாஸ், ஜெரோம், சூர்யா ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கத்திகள், ஒரு செல்போன், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அவர்கள் அன்புரஜினியை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய போது கீழே விழுந்ததில் ஸ்ரீராமின் வலது கையில் முறிவும், ஜெரோமின் இடது காலில் முறிவும் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சோழன். அவரது கூட்டாளிகள் வினோத், ஸ்ரீராம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வினோத் புதுவையை அடுத்த தமிழக பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதானவர்களை ஜாமீனில் எடுக்க அன்புரஜினி பல உதவிகளை செய்து வந்தார். இது எங்களுக்கு தெரியவந்தது. எனவே ஸ்ரீராம் தனது நண்பரின் கொலைக்கு காரணமாக இருந்த அன்புரஜினியை பழிக்குப்பழியாக கொலை செய்ய வேண்டும் என்று சோழனிடம் தெரிவித்தார். அவரும் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து சோழன் தூண்டுதலின் பேரில் ஸ்ரீராம் உள்பட 5 பேர் சேர்ந்து அன்புரஜினியை கொலை செய்ய திட்டமிட்டோம். இதற்காக சோழனின் சகோதரர் பாண்டியன் மூலம் நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்திகளை வாங்கினோம். .

பின்னர் அன்புரஜினியை கடந்த ஒரு வாரமாக பின்தொடர்ந்து சென்றோம். இந்த நிலையில் 10-ந் தேதி அவர் தனது நண்பர்களுடன் காலாப்பட்டு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றது தெரியவந்தது. இதனை அறிந்த நாங்கள் கோட்டக்குப்பம் பகுதியில் பதுங்கி இருந்தோம். பின்னர் அன்புரஜினியின் கார் வந்த உடன் அவரை பின்தொடர்ந்து வந்து முத்தியால்பேட்டை பகுதியில் வழிமறித்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினோம். இதில் நிலைகுலைந்து போன அன்புரஜினி மற்றும் அவரது நண்பர்கள் காரில் இறங்கி ஓடினர். நாங்கள் அன்புரஜினியை சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தோம். பின்னர் நரிக்குறவர் காலனி பகுதியில் பதுங்கி இருந்தோம். போலீசார் எங்களை கைது செய்தனர்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சோழனின் தம்பி பாண்டியன், குருசுக்குப்பம் சந்துரு, மணி ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com