பெங்களூருவில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது - ரூ.28 லட்சம் வாகனங்கள் மீட்பு

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
Published on

பெங்களூரு,

பெங்களூரு மாகடி ரோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாகடி ரோட்டில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவாகள் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர்கள் துமகூரு மாவட்டம் உப்பாரஹள்ளியை சேர்ந்த தினேஷ் (வயது 31), ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பயாஜ் ஷெரீப்(21), தாவரகெரே அருகே சி.கே.ஹள்ளியை சேர்ந்த மகேஷ்(24), பன்னரகட்டாவை சேர்ந்த பிரஜ்வல்(32) என்று தெரிந்தது.

இவர்கள் 4 பேரும் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 4 பேரும் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அருகே நிறுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கள்ளச்சாவி போட்டு திருடி வந்துள்ளார். அவ்வாறு திருடும் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக 4 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடி விற்றதும் தெரியவந்துள்ளது.

கைதானவர்களில் தினேஷ், பயாஜ் ஷெரீப் ஏற்கனவே மோட்டார் சைக்கிள்கள் திருடி விற்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும் தெரிந்தது. 4 பேரும் கொடுத்த தகவலின் பேரில் ரூ.28 லட்சம் மதிப்பிலான 55 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ மீட்கப்பட்டது. அவர்கள் 4 பேர் மீதும் மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com