ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கொண்டுவந்த ரூ.1 கோடி பறிமுதல்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் ஒரு வாலிபர் கொண்டுவந்த ரூ.1 கோடியே 5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
Published on

செங்குன்றம்,

ஆந்திரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்திவருவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையிலான போலீசார் நேற்று காலை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை வந்த ஆந்திர மாநில பஸ்சை சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.1 கோடியே 5 லட்சத்தை 24 பண்டல்களாக கொண்டுவந்ததை கண்டுபிடித்தனர்.

போலீசார் அந்த வாலிபரை அவர் கொண்டுவந்த பணத்துடன் பிடித்து செங்குன்றம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் பணத்தை கொண்டுவந்த வாலிபர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், பாவகாபுரம் கிராமத்தை சேர்ந்த துர்காராவ் (வயது 35) என்பது தெரிந்தது.

சென்னை சவுகார்பேட்டையில் நகைகள் வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார். செங்குன்றம் போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். அந்த பணம் பாதுகாப்பாக செங்குன்றம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com