செங்குன்றம்,
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி, கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட்டனர். தற்போது வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
நேற்று காலை 6 மணிக்கு நீர் மட்டம் 28.82 அடியாக பதிவானது. தற்போது 1,481 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
கிருஷ்ணா நதிநீர் வினாடிக்கு 480 கனஅடியாகவும், மழை நீர் வினாடிக்கு 171 கனஅடியாகவும் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 355 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 19 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதற்கிடையே செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் நேற்று காலை வரை 102 நாட்களில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 4.171 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.