திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள சிவகிரிபட்டி ராமநாதநகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). தவில் இசை கலைஞர். இவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு பை நிறைய மனுக்கள், விருது மற்றும் சான்றிதழுடன் வந்தார். பின்னர் அவர் தனக்கு ஓய்வூதியம் கிடைக்காததால் விருதை திரும்ப ஒப்படைக்க போவதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அவரை சமாதானம் செய்து, மனு கொடுக்க அழைத்து சென்றனர். பின்னர் அவர், புகார் பெட்டியில் தனது மனுவை போட்டார். இதுகுறித்து தவில் இசை கலைஞர் மாரிமுத்து கூறுகையில், எனது குடும்பத்தினர் கடந்த 7 தலைமுறைகளாக தவில் வாசித்து வருகிறோம். எனக்கு சத்யபாமா என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் இருந்து திண்டுக்கல் வரை 61 கி.மீ. தூரம் காலில் கட்டைகளை கட்டி பொய்க்காலில் நடந்தபடி, தவில் இசைத்தேன்.
அதேபோல் தலைகீழாக 42 நிமிடங்கள் தொங்கியபடி தவில் இசைத்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கு மேலாக தவில் இசை கலைஞராக இருக்கும் எனக்கு கலைமாமணி விருது வழங்கவில்லை. ஆனால், கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைச்சுடர்மணி விருது வழங்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்ற போது விபத்தில், எனது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் தவில் இசைக்க முடியாத நிலையில் உள்ளேன். எனவே, நலிவுற்ற கலைஞர்களுக்கான ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தேன். இதுவரை ஓய்வூதியம் கிடைக்காததால், மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறேன். இதனால் விரக்தியில் விருது மற்றும் சான்றிதழை ஒப்படைக்க வந்தேன், என்றார்.