வெஜ் ரோல்ஸ், இட்லி, அல்வாவுடன் விண்வெளிக்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர்கள்

ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள் வெஜ் ரோல்ஸ், இட்லி, அல்வாவுடன் செல்கின்றனர்.
Published on

புதுடெல்லி,

2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ககன்யான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து வெளியிட்டு இருந்தது.

விண்வெளி உணவு, விண்வெளியில் உடல் நிலையை கண்காணிக்கும் தொழில்நுட்பம், அவசர காலத்தில் தப்பிக்கும் உபகரணங்கள், கதிர்வீச்சை அளவிடும் கருவி, வீரர்கள் பயணிக்கும் கூண்டு பகுதியை பத்திரமாக மீட்பதற்கான பாராசூட் உள்ளிட்டவற்றை டி.ஆர்.டி.ஓ. வழங்குகிறது.

இந்த திட்டத்திற்கு விண்வெளிக்கு பயணம் செய்ய இந்திய விமானப்படையின் 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மைசூரில் உள்ள டிஆர்டிஓவின் பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் நான்கு இந்திய விண்வெளி வீரர்களுக்கு சுவையான பொருட்களை தயார் செய்துள்ளது. அவை அவர்களுடன் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும். முட்டை ரோல்ஸ், வெஜ் ரோல்ஸ், இட்லி, மூங் தால் அல்வா மற்றும் வெஜ் புலாவ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் அவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும், விண்வெளி வீரர்கள் ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் நீர் மற்றும் பழச்சாறுகள் உள்ளிட்ட திரவங்களை குடிக்க உதவுவதற்காக, மிஷன் ககன்யானுக்கு சிறப்பு கண்டெய்னர்களும் தயாரிக்கப்பட்டு உள்ளன.

பெங்களூருவில் உள்ள ஐ.ஏ.எஃப் இந்திய விமான மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் 2022-ம் ஆண்டளவில் நான்கு விமானிகள் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றி வரும் பணிக்கு அனுப்பப்படுவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com