கோவை,
கோவை கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 4-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்த வனிதா (வயது 40) என்பவரிடம் 3 பவுன் நகை, கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகரை சேர்ந்த ரங்கநாயகியிடம் (61) 3 பவுன் நகை, புலியகுளத்தை சேர்ந்த அம்சவேணி (65), வைசியாள் வீதியை சேர்ந்த மகேஸ்வரி (65) ஆகியோரிடம் தலா 1 பவுன் நகை உள்பட மொத்தம் 10 பேரிடம் இருந்து 35 பவுன் நகை பறிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரியகடை வீதி, உக்கடம் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பாண்டியராஜன் என்பவருடைய மனைவி இந்துமதி (27), இலங்கை கொழும்புவை சேர்ந்த ரஞ்சித்குமாரின் மனைவி பராசக்தி (36), லண்டனை சேர்ந்த சின்னத்தம்பியின் மனைவி செல்வி (36) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசா கைது செய்தனர்.
கைதான 3 பெண்களும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- நாங்கள் 3 பேரும் உறவினர் முறையில் அக்காள், தங்கை ஆவோம். 3 பேரும் இணையதளத்தில் இந்தியா முழுவதும் எங்கு திருவிழாக்கள் நடைபெறுகிறது என்று பார்ப்போம். பின்னர் லண்டன், கொழும்புவில் இருந்து விமானத்தில் பறந்து வந்து விழாக்கள் நடைபெறும் பகுதிக்கு சென்று அறை எடுத்து தங்கி, விழா நடைபெறும் கோவில்களுக்கு சென்று அங்கு நிகழும் சூழ்நிலைகளை பார்ப்போம். பின்னர் விழாவின் போது கூட்டத்தை பயன்படுத்தி பெண்கள் அணிந்து இருக்கும் நகைகளை பறிப்போம். குறிப்பாக மூதாட்டிகள் கூட்டத்தில் இருந்தால் அவர்களை குறிவைப்போம். நகை பறிப்பில் ஈடுபடும் போது நாங்கள் பெண்கள் என்பதால் யாருக்கும் சந்தேகம் வராது. பின்னர் அவரவர் வீடுகளுக்கு சென்று விடுவோம்.
நாங்கள் நாடு முழுவதும் பல்வேறு விழாக்களில் கைவரிசை காட்டி உள்ளோம். கடந்த மாதம் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்று நகை பறிப்பில் ஈடுபட்டோம். கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது கூட்டத்தில் நுழைந்து நகையை பறித்தோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.
இவர்கள் திருப்பதி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டபோது கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். மீண்டும் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர்.
10 பவுன் நகையுடன் தப்பிச்சென்ற இந்துமதியின் கணவர் பாண்டிய ராஜனை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த போலீசார் அதனை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.