திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் புதரில் பதுங்கி இருந்த ராட்சத முதலை தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி பிடித்தனர்

திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் புதரில் பதுங்கி இருந்த ராட்சத முதலையை வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் சேர்ந்து 2 மணிநேரம் போராடி பிடித்தனர்.
Published on

திருச்சி,

திருச்சி காவிரி ஆறு, பெட்டவாய்த்தலை அருகே பிரிந்து உய்யகொண்டான் வாய்க்காலாக பாய்ந்து செல்கிறது. இந்த வாய்க்கால் புத்தூர் ஆறுகண் பாலம் வழியாக மாநகருக்குள் பல்வேறு பகுதிகளை கடந்து வாழவந்தான்கோட்டை வரை செல்கிறது. புத்தூர் ஆறுகண் பாலம் அருகே குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை இளைஞர்கள் சிலர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத முதலை முட்புதரில் பதுங்கி இருந்தது.

இதைக்கண்டு இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சுருக்கு கயிறை வீசி முதலையை பிடிக்க முயன்றனர். ஆனால் முதலை சுருக்கு கயிற்றில் சிக்கவில்லை. பின்னர் மீண்டும், மீண்டும் முயற்சித்து சுமார் 2 மணி நேரம் போராடி முதலையை பிடித்தனர். பின்னர் ராட்சத முதலையை கரைக்கு இழுத்து வந்தனர். பின்னர் தீயணைப்புத்துறையினர் கொண்டு வந்த ஏணியில் முதலையை வைத்து கயிறு மூலம் கட்டி தூக்கி கொண்டு வந்தனர்.

வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

உய்யகொண்டான் வாய்க்காலில் முதலை பிடிபட்ட சம்பவம் அறிந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் பிடிபட்ட முதலையை தீயணைப்பு வீரர்கள் தூக்கி சென்றபோது, ஆர்வத்துடன் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் முதலையை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அதை வாகனத்தில் ஏற்றி கொண்டுபோய் கல்லணையில் தண்ணீர் ஆழமான பகுதியில் விட்டனர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் கூறுகையில், பிடிபட்ட முதலை சுமார் 600 கிலோ எடை இருக்கும். தற்போது ஆறு, குளம், வாய்க்கால்களில் தண்ணீர் குறைவாக உள்ளதால் முதலை போன்ற பிராணிகள் கரையில் ஒதுங்கி இரைதேடும். அதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றனர்.

திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் பகுதியில் முதலை பிடிபட்ட சம்பவம் நேற்று காலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com