பலவீனமான ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது ஜி.கே.வாசன் பேட்டி

“உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத பலவீனமான ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது”, என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
பலவீனமான ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது ஜி.கே.வாசன் பேட்டி
Published on

சென்னை,

காமராஜர் 115-வது பிறந்தநாளையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர்கள் பிஜூ சாக்கோ, சைதை மனோகரன், சத்தியநாராயணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் மூத்த தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மூத்த தலைவர்கள் லட்சுமிகாந்தன் பாரதி, பிச்சை, ஓவி.ராமணன், கலைப்பிரிவு தலைவர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகிய 4 பேருக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட்டது. மேலும், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-

த.மா.கா. என்பது தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தி. காமராஜர் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் விழா எடுத்து கொண்டு இருக்கிறோம். கட்சியின் இயக்க பணியும், மக்கள் பணியும் நம்முடைய இலக்கை அடைய அடித்தளமாக அமையும். திராவிட இயக்கங்களின் கோட்டை சென்னை என்று இருந்தது. ஆனால் அதை மாற்றும் வகையில் த.மா.கா. பலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. த.மா.கா.வின் பலம் சென்னை கோட்டையாக தற்போது மாறி இருக்கிறது. அதற்கு சான்று இந்த கூட்டம் தான். தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் த.மா.கா.வில் தான் அதிகம் இருக்கிறார்கள்.

வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி தமிழகத்துக்கு தேவை. அந்தவகையில் அந்த சிறந்த ஆட்சியை தருவதற்கு எங்களோடு துணை நிற்பவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதுதான் காமராஜர் பிறந்தநாளின் செய்தி.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வி தற்போது வியாபாரம் ஆக்கப்பட்டு இருக்கிறது. கல்வியை ஏழை-எளிய மாணவர்கள் பெறுவதற்கு காமராஜரின் நேர்மை, எளிமை, ஊழலற்ற ஆட்சி தேவை. தற்போது தமிழகத்தில் நடக்கும் அ.தி.மு.க. ஆட்சி மக்கள் விரும்பாத ஆட்சி. இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. உள்ளாட்சி தேர்தலை கூட நடத்த முடியாத பலவீனமான ஆட்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com