நாதுராம் கோட்சேவை பின்பற்றுபவர்கள் என்னையும் கொலை செய்யலாம் -அசாதுதின் ஓவைசி

நாதுராம் கோட்சேவை பின்பற்றுபவர்கள் என்னையும் கொலை செய்யலாம் என அசாதுதின் ஓவைசி கூறியுள்ளார்.
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை ஐதராபாத் எம்.பி. அசாதுதின் ஓவைசி கடுமையாக எதிர்க்கிறார்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்க்கும் காரணத்திற்காக என்னை, காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை பின்பற்றுபவர்கள் சுட்டுக் கொல்லலாம் என்று கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அசாதுதின் ஓவைசி, அவர்களுடைய நேசமெல்லாம் காஷ்மீருக்காகதான், அங்கிருக்கும் மக்களுக்காக கிடையாது. அவர்களுடைய கவலையெல்லாம் அதிகாரம் பற்றியதாக இருக்கிறதே தவிர நீதி மற்றும் சேவையை பற்றியதாக இல்லை. பிரிவு 19 அங்கு பொருந்தாது? இது என்ன நெருக்கடி நிலையா? பா.ஜனதாவுடன் தொடர்புடையவர்களுக்கு மட்டும் தொலைதொடர்பு சேவையும், ஹெலிகாப்டர் சேவையும் வழங்கப்படுகிறது. 80 லட்சம் மக்களுக்கு ஏன் தொலைதொடர்பு சேவையை வழங்கக்கூடாது? இந்த அரசு அரசியலமைப்பு சட்டத்தை முழுவதுமாக மறந்துவிட்டது, எனக் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பரப்பும் வதந்திகளுக்கு ஆதரவு அளிப்பதாக அசாதுதின் ஓவைசி மீது குற்றம் சாட்டப்படுகிறது.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பதிலில், நான் ஒருநாள் சுட்டுக்கொல்லப்படுவேன் என்றுதான் நான் நம்புகிறேன். கோட்சேவை பின்பற்றுபவர்கள் இதனை செய்வார்கள் என்றும் நம்புகிறேன். மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றதை போன்று, என்னையும் சுட்டுக் கொல்வார்கள். பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட எனக்கு எதுவும் கிடையாது எனக் கூறியுள்ளார். மத்திய அரசு சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது அரசியலமைப்புக்கு எதிரானது; நாங்கள் அங்கு கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம் எனக் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதன் பின்னணியில் உள்ள முழுயோசனையும் மாநிலத்தின் மக்கள்தொகையை மாற்றுவதாகும் எனவும் குற்றம் சாட்டியுள்ளா ஓவைசி.

காஷ்மீரின் மக்கள்தொகையை மாற்றுவதும், முஸ்லிம் அல்லாத ஒருவரை பா.ஜனதாவிருந்து முதல்வராக்குவதும்தான் அவர்களுடைய திட்டம். அதனால்தான் அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com