ஒரே நாளில் ரூ.784 உயர்வு தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது - ஒரு பவுன் ரூ.33,760-க்கு விற்பனை

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.784 உயர்ந்து, ரூ.33 ஆயிரத்து 760-க்கு விற்பனை ஆனது.
Published on

சென்னை,

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து வரலாறு காணாத உயர்வை கண்டு வந்த தங்கம் விலை, கடந்த ஆண்டின் இறுதியில் ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தொட்டது.

அதன் பின்னரும் விலை அதிகரித்து கொண்டே வந்து, கடந்த ஜனவரி மாதம் ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்தை கடந்தது. தொடர்ச்சியாக விலை உச்சத்தில் இருந்து, கடந்த மாதம் (பிப்ரவரி) 21-ந் தேதி ரூ.32 ஆயிரத்தையும், அதற்கடுத்த ஓரிரு நாட்களில் ரூ.33 ஆயிரத்தையும் தாண்டியது.

அதன் பிறகும் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அவ்வப்போது விலை சற்று குறைந்தாலும், மறுநாள் ராக்கெட் வேகத்தில் உயருகிறது. அந்த வகையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 122-க் கும், ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 976-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.98-ம், பவுனுக்கு ரூ.784-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 220-க்கும், ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆகி, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.234-ம், பவுனுக்கு ரூ.1,872-ம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால், ஒரு பவுன் தங்கம் இன்று (சனிக்கிழமை) ரூ.34 ஆயிரத்தை கடந்து விட வாய்ப்பு இருக்கிறது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. கிராமுக்கு 70 காசும், கிலோவுக்கு ரூ.700-ம் அதிகரித்து, ஒரு கிராம் 50 ரூபாய் 40 காசுக்கும், ஒரு கிலோ ரூ.50 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதற்கான காரணம் குறித்து, சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறுகையில், அமெரிக்காவின் பெடரல் வங்கியில் வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் குறைந்ததாலும், உலக பொருளாதாரம் தொடர்ந்து மந்தமாக இருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிந்து வருவதாலும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்தின் மீது முதலீடு செய்கிறார்கள். இதனால் தங்கம் விலை உயருகிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் விலை உயரும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com