கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு தனித்துணை கலெக்டர் பாலசுப்ரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, மாவட்ட ஆதிதிராவிட நல அதிகாரி லீலாவதி ஆகியோர், பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். பின்னர் அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
இந்த கூட்டத்தில், கரூர் மாவட்டம் புகளூர் தாலுகா புஞ்சைதோட்டக்குறிச்சி கிராமம் கோவிந்தம்பாளையம் ஊர்கொத்துக்காரர் வடிவேல் தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், கோவிந்தம்பாளையத்தில் உள்ள மயான இடத்தை பட்டா போட்டு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இது குறித்து வருவாய்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பினை அகற்றி அந்த மயானத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
புலியூர் கோவில்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் வெறிநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. அவை இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து போடப்பட்டிருக்கிற ஆடுகளை கடித்து குதறும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றுகூறியிருந்தனர்.
30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனம்
பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் கரூர் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர் பாபு, உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் தங்கவேலு உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றி அங்குள்ள விவசாய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட எரிவாயு திட்டங்கள் மற்றும் ஆலைகளுக்கு அனுமதியில்லை என அரசு நடவடிக்கை மேற்கொண்டது வரவேற்கத்தக்கது ஆகும். எனினும் கரூர் மாவட்டத்தை இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவராதது கரூர் மாவட்ட காவிரி பாசன விவசாயிகளுக்கு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, லாலாபேட்டை, வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காவிரி பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது. எனவே கரூர் மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்த்திட வேண்டும். மாவட்ட கலெக்டர் இந்த மனுவை அரசுக்கு பரிந்துரைத்து கரூர் ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் 22 ஊராட்சிகள், குளித்தலை ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள், தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள காவிரி பாசன 2 ஊராட்சிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
தோகைமலை ஒன்றியம் ஆர்.டி.மலை கிராமம் அழகாபுரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள ஒரு குடிநீர் ஆலையானது, சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீர் விற்பனைக்காக பூமியில் அதிகளவு ஆழத்திலிருந்து நிலத்தடி நீரை எடுத்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுவட்டார விவசாய பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது அங்குள்ள நீர் உப்புத்தன்மையுடன் இருப்பதால் பல்வேறு சிரமங்களுக்கு விவசாயிகள், பொதுமக்கள் ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிலத்தடிநீர்பிரிவு அதிகாரிகள் அங்கு சென்று உரிய ஆய்வு மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மணல் கொள்ளையை தடுக்ககோரி...
சமூக ஆர்வலர் முகிலன் தலைமையில் காவிரியாறு பாதுகாப்பு இயக்கத்தினர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பதாகைகளை கையில் ஏந்தியபடி வந்து மனு கொடுத்தனர். அதில், விருதுநகரில் பத்திரிகையாளர் கார்த்தியை கொலைவெறியோடு தாக்க தூண்டி விட்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும். கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் சட்டவிரோதமாக மாட்டு வண்டி, லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. அதிலும் தோட்டக்குறிச்சி முதல் வாங்கல் வரை ஆங்காங்கே மணலை குவித்து வைத்து கடத்துவது குறித்த வீடியோ ஆதாரம் உள்ளது. எனவே மணல்கொள்ளையை தடுத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கு துணை போகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
ராக்கம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பொதுமக்கள் கொடுத்த மனுவில் தோகைமலை ஒன்றியம் ராக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மாணவ, மாணவிகளின் நலன் கருதி நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தோகைமலை பாதர்பட்டி-குளித்தலை செல்லும் டவுன் பஸ்சை கழுகூர், மருதூர், ராக்கம்பட்டி, காந்திநகர், ராம்நகர், அதனூர் வழியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்று கொண்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள், இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
கூட்டத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.