தொட்டபெட்டா ஊராட்சியில் ரூ.1.73 கோடி மதிப்பில் 23 வளர்ச்சி பணிகள்; கலெக்டர் தகவல்

தொட்டபெட்டா ஊராட்சியில் நடப்பாண்டில் ரூ.1.73 கோடி மதிப்பில் 23 வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.
Published on

ஊட்டி,

அண்ணல் காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையொட்டி நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட முத்தோரை லீஸ் பகுதியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசியதாவது:

இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்ற தந்த காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்தி, அப்பகுதியில் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து முடிவு எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டம் சுற்றுச்சூழல் நிறைந்த மாவட்டமாகவும், இயற்கை அழகுடன் காணப்படும் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வாழும் மாவட்டமாகவும் உள்ளது.

இதுபோன்ற மாவட்டத்தை தமிழகத்தில் நாம் காண முடியாது. நீலகிரியின் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்கள். பசுமையை பாதுகாக்க நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சுகாதாரத்தை பாதுகாக்க அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரம் பேணப்படுவதோடு, மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட பணிகள், கிராமப்பகுதிகளில் ஏழை மக்கள் மேம்படும் வகையில் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம், காசநோய் பற்றிய விழிப்புணர்வு போன்றவை குறித்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிந்துகொண்டு உங்கள் ஊராட்சி பகுதியை தூய்மையான இடமாக மாற்ற கிராம மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். குப்பைகளை வீட்டின் வெளியிலோ அல்லது சாலையோரம், கால்வாய் மற்றும் வனப்பகுதியை ஒட்டியோ போடாமல் குப்பை எடுக்க வரும் தூய்மை காவலர்களிடம் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனியாக பிரித்து கொடுக்க வேண்டும். அப்போது தான் நாம் வசிக்கும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க முடியும்.

தொட்டபெட்டா ஊராட்சியில் 20132014ம் ஆண்டு முதல் 20162017ம் ஆண்டு வரை 938 வளர்ச்சி திட்ட பணிகள் ரூ.8.63 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டு உள்ளன. 20172018ம் ஆண்டில் 75 வளர்ச்சி திட்ட பணிகள் ரூ.1.06 கோடி மதிப்பிலும், நடப்பாண்டில் 23 வளர்ச்சி திட்ட பணிகள் ரூ.1.73 கோடி மதிப்பிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் காசிநாதன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமன், நாகராஜன், ஊட்டி தாசில்தார் தினேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com