ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதற்கு தொழில்துறையினரின் வரவேற்பும், எதிர்ப்பும்

ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதற்கு திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
Published on

திருப்பூர்,

மத்திய, மாநில அரசுகளுக்கு வரிகள் மூலம் வரும் வருமானம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்தது.

இதற்கு தொழில்துறையினர் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் இந்த வரிவிதிப்பிற்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஏற்கனவே இருந்த நடைமுறைகள் அனைத்தும் மாறுதலுக்குட்பட்டு இருப்பதால் அனைவரும் இதற்கு உட்பட வேண்டிய நிலை உள்ளது. ஜி.எஸ்.டி. குறித்த தடுமாற்றத்திற்கு முதலில் சிறு, குறு, தொழில்நிறுவனத்தினரின் அறியாமையே முக்கிய காரணமாக இருக்கிறது. நடுத்தர நிறுவனங்களில் உள்ளவர்கள் கூட படிப்பறிவு இல்லாதவர்களாகவே இருந்து வருகின்றனர். இதனால் வரிவிதிப்பு முறைகளை எளிமைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.

மேலும், ஜி.எஸ்.டி. குறித்த சந்தேகங்களை தீர்க்கவும், இதுகுறித்து பயிற்சி அளிக்கவும் ஒரு அதிகாரிக்கு 100 நிறுவனங்கள் வீதம் பிரித்து கொடுக்க வேண்டும். பின்னர் அந்த அதிகாரிகளை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் ஜி.எஸ்.டி.யில் உள்ள தொழில்துறையினரின் சிறிய அளவிலான குறைபாடுகளும் நிவர்த்தியாகும். இது பிரகாசமான பலனை தரும். இல்லையென்றால் ஜி.எஸ்.டி.யை சிறிது காலம் நீட்டிப்பு செய்து அனைவரும் இந்த வரிவிதிப்பு குறித்து அறிந்த பின்னர் நடைமுறை படுத்தியிருக்கலாம்.

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தோம். எங்கள் கோரிக்கை உள்பட அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு என்ற சட்டம் வரவேற்கத்தக்கது. இந்த வரிவிதிப்பு பின்னலாடை தொழில்துறையின் முன்னேற்றத்திற்கு உபயோகமானதாக இருந்தாலும், பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது.

ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு 18 சதவீத வரியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று இந்த வரிவிகிதம் 5 சதவீதமாக குறைக்கப்பட்டதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு சார்பில் இது உறுதிப்படுத்தப்படாமலே இருந்து வருகிறது. இது குறித்த முழு விவரங்களும் தொழில்துறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் அரசு இன்னமும் செயல்படவில்லை. இதனால், ஜாப் ஒர்க் நிறுவனத்தினருக்கான இந்த சந்தேகங்களை போக்கி தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஜாப் ஒர்க் நிறுவனத்தினருக்கு 18 சதவீதம் வரி என்ற நிலையே நீடித்தால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

நாகராஜன்(சாய ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம்):

ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது வரவேற்கத்தக்க ஒன்று. இதர உள்ளீட்டு வரிகள் இல்லாமல் ஒரே வரி மூலம் தொழிலை செய்து கொள்ள இதுவாய்ப்பாக அமையும். ஆனால் இதில் உள்ள நிறை, குறைகளை தெரிந்துகொள்ள இன்னும் ஒருசில நாட்கள் ஆகிவிடும். இந்த வரிவிதிப்பு மூலம் தொழில்துறைக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை அரசுக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில நாட்கள் கடந்த பிறகே வரிவிதிப்பால் தொழில்துறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தெளிவு கிடைக்கும்.

சாய ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது எங்கள் தொழிலை மிகவும் பாதிப்பதாக இருக்கும். இதனால் சாய ஆலைகளுக்கான ரசாயனங்களுக்கு 5 சதவீதமாகவோ அல்லது 12 சதவீதமாகவோ வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தொழிலை நலிவடையாமல் பாதுகாக்கலாம்.

பாபுஜி(சிஸ்மா):

ஜி.எஸ்.டி.யில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். மூலப்பொருட்களின் விலையேற்றம், உற்பத்தி திறன் அதிகரித்தல் உள்ளிட்டவைகளால் நமது நாட்டின் ஆடை விற்பனை திறன் குறைந்துள்ளது. இந்த சூழலில் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டுள்ளது மீண்டும் கடும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் சிறு, குறு நடுத்தர பின்னலாடை தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. ரூ.20 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வர தேவையில்லை என்ற அறிவிப்பு தமிழகத்திற்குள் வர்த்தகம்செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்த கூடிய ஒன்றாக உள்ளது. வெளி மாநிலங்களுக்கு சரக்குகள் அனுப்புபவர்கள் ஜி.எஸ்.டி வரம்புக்குள் வந்து விடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் சிறு, குறு நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் வெளிமாநிலங்களை நம்பியே வர்த்தகத்தை நடத்துவதால் ரூ.20 லட்சம் வரம்புக்குள் வரமுடியாத சூழலை அரசு உருவாக்கியுள்ளது. ஆடை உற்பத்தியின் சார்பு தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும் வாய்ப்பு இருப்பதால், ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு முன் வடிவம் கொடுக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com