தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் - நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் வலியுறுத்தல்

தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று டெல்லியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தினார்.
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பொருட்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இங்கு அனைத்து மாநிலங்கள் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களை சேர்ந்த பிரத்யேக பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் அரசின் பல்வேறு துறைகள் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த வர்த்தக கண்காட்சியையொட்டி தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு நாள் விழா நடத்துவது வழக்கம். அதன்படி தமிழ்நாடு நாள் விழா நேற்று நடை பெற்றது. விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு தமிழ்நாடு அரங்கை பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற தமிழக கலைநிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார்.

நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர், தமிழ்நாடு அரசு இல்ல உறைவிட முதன்மை ஆணையர்கள் ஹிதேஸ்குமார் மக்வானா, ஆசிஷ் வச்சானி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் சென்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இந்தியா முழுவதற்கும் தேவையான தீப்பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. தீப்பெட்டி எனது தொகுதியான கோவில்பட்டி மட்டுமின்றி, எங்களுடைய மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்ற தொழிலாக உள்ளது. காலம்காலமாக லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தீப்பெட்டி தயாரிப்பதற்கு தேவையான அனைத்து மூலப்பொருட்களுக்கும் 12 சதவீத ஜி.எஸ்.டி. உள்ளது. ஆனால் தீப்பெட்டிக்கு 18 சதவீதம் என்று உள்ளது. இந்த வேறுபாட்டை நீக்கி தீப்பெட்டிக்கும் ஜி.எஸ்.டி.யை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது ஒவ்வொரு முன்பதிவு என்று அல்லாமல் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தனியாக கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறதே? என்று அவரிடம் கேட்டதற்கு, விரைவில் இதற்கு முடிவு எட்டப்படும் என்று பதில் அளித்தார்.

ஜல்லிக்கட்டை பார்வையிட பிரதமருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கென்று ஒரு கமிட்டி இருக்கிறது. அவர்கள் தான் யாரை அழைப்பது என்பதை முடிவு செய்வார்கள். பிரதமரை அவர்கள் அழைத்தால், அதற்குரிய உதவிகளை செய்ய அரசு தயாராக இருக்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com