ஆளில்லா விமான தயாரிப்பில் அசத்தும் மாணவர்

சர்வதேச அளவிலும் இவர் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
ஆளில்லா விமான தயாரிப்பில் அசத்தும் மாணவர்
Published on

டிரோன் எனப்படும் ஆளில்லா விமான தயாரிப்பில் அசத்திவருகிறார், மைசூரு மாணவர் பிரதாப். ஆளில்லா விமான உருவாக்கத் திறமைக்காக தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இவர் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

மைசூருவில் உள்ள ஜே.எஸ்.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி., சி.பி.இசட். (வேதி யியல், தாவர வியல், விலங்கியல்) பயின்ற பிரதாப், ஆளில்லா விமான உருவாக்கத்திலும், அது தொடர்பான ஆராய்ச்சியிலும் தணியாத ஆர்வம் கொண்டிருக் கிறார்.

எல்லைப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, மீட்பு, போக்கு வரத்து நிர்வாகம், மருத்துவப் பணிகளுக்கு என்று தனித்தனியான டிரோன்களை உருவாக்குவது பிரதாப்பின் சிறப்பு.

ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச ரோபோ கண்காட்சியில் பங்கேற்ற பிரதாப், தனது டிரோன்களுக்காக தலா ஒரு தங்கம், வெள்ளிப் பதக்கங்களுடன், ரூ. 7 லட்சம் பரிசுத்தொகையையும் பெற்றார்.

தொடர்ந்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் திட்ட மேம்பாட்டாளர் என்ற பொறுப்புடன், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான நிதியுதவியும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

வருங்காலத்தில் ஆளில்லா விமானப் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கப் போகிறது. குறிப்பாக, நாட்டின் பாதுகாப்பில் அது முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது. ஏற்கனவே, டிரோன்களால் ஆன நெட்வொர்க் அமைப்பு, எல்லைப் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்கு மற்றும் மீட்புப் பணிகளில் பயன்படத் தொடங்கிவிட்டது.

ஆரம்பத்தில், சிறிய விளையாட்டு ஹெலிகாப்டரை பறக்க வைத்ததுதான் என்னை ஆளில்லா விமானங்களில் ஆர்வம் கொள்ள வைத்தது. எனது பெற்றோர் எளிய விவசாயிகள்தான். ஆனாலும் என் ஆர்வம் அறிந்து இத்துறையில் எனக்கு ஆதரவு கொடுத்தனர். நான் படித்த கல்லூரியிலும் எனக்கு உதவியாக இருந்தனர். மேலும் பல புதுமையான ஆளில்லா விமானங்களை உருவாக்க வேண்டும், அதன் மூலம் நம் தேசத்துக்கு உதவ வேண்டும் என்பதே என் ஆசை என்று உற்சாகமாகப் பேசி முடிக்கிறார், பிரதாப்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com