மனைவியால் பாதிக்கப்படும் கணவருக்கு ஆதரவாக போராடுவேன்; சுயேட்சை வேட்பாளர் நூதன பிரசாரம்

வரதட்சணை என்ற பெயரில் மனைவியால் பாதிக்கப்படும் கணவருக்கு ஆதரவாக போராடுவேன் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களிடம் நூதன பிரசாரம் செய்துள்ளார்.
மனைவியால் பாதிக்கப்படும் கணவருக்கு ஆதரவாக போராடுவேன்; சுயேட்சை வேட்பாளர் நூதன பிரசாரம்
Published on

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், குஜராத்தின் அகமதாபாத் கிழக்கு மக்களவை தொகுதியில் தசரத தேவ்டா என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இவர் அரசு சாரா அமைப்பு (என்.ஜி.ஓ.) ஒன்றின் தலைவராக இருந்து வருகிறார். இந்த அமைப்பு, வரதட்சணை என்ற பெயரில் மனைவி மற்றும் அவரது உறவினர்களால் பாதிக்கப்படும் கணவருக்கு ஆதரவாக போராடும் கொள்கையை கொண்டது. இதில், 60 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் மற்றும் 2017ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் ஆகியவற்றில் அவர் போட்டியிட்டார். ஆனால் இவற்றில் முறையே 2,300 வாக்குகள் மற்றும் 400 வாக்குகளையே அவர் பெற்றுள்ளார். 3வது முறையாக அவர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதுபற்றி பேசிய அவர், நான் வெற்றி பெற்றால் ஆண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதனை உறுதி செய்வேன். ஐ.பி.சி. பிரிவு 498ஐ பயன்படுத்தி பல கணவர்களை, மனைவிகள் பலர் துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன். இந்த சட்ட பிரிவை ஒழிக்க கோருவேன். பெண்களுக்கு இருப்பது போன்று ஆண்களுக்காக தேசிய ஆணையம் ஒன்றை அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

குடும்ப வன்முறை சட்டம் கூட திருத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சம உரிமை வேண்டும். ஒவ்வொரு வருடமும் தங்களது மனைவிகளால் நூற்றுக்கணக்கான ஆண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை நாம் தடுத்து நிறுத்த பணியாற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com