தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை: வைப்பாறு பகுதியில் 100 மி.மீ. பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. வைப்பாறு பகுதியில் அதிகபட்சமாக 100 மி.மீ. மழை பதிவானது.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. வைப்பாறு பகுதியில் அதிகபட்சமாக 100 மி.மீ. மழை பதிவானது.

வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் போதுமான மழை பெய்யாமல் இருந்தது. இதனால் விவசாயிகள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து இருந்தனர். நேற்று முன்தினம் இரவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து உள்ளது.

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 1.45 மணி அளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் முக்கால் மணி நேரம் நீடித்த பலத்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாறுகால், ஓடைகள், நீர்வரத்து கால்வாய்களில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள், அடைப்புகள் இருந்ததால் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து, கருப்பு நிறத்தில் சாலைகளில் ஓடியது.

கோவில்பட்டி மெயின் ரோடு, தெற்கு பஜார், மாதாங்கோவில் ரோடு, கிழக்கு பார்க் ரோடு, மேற்கு பார்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 அடி உயரத்துக்கு குளம் போன்று தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

வாகன ஓட்டிகள் சிரமம்

கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க வழிப்பாதையில் சுமார் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

எனவே கோவில்பட்டி மூப்பன்பட்டி கண்மாய், செவல்குளம் கண்மாய்க்கு மழைநீர் எளிதில் வழிந்தோடும் வகையில், நீர்வரத்து கால்வாய்கள், ஓடைகளை தூர்வார வேண்டும். வாறுகாலில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

எட்டயபுரம்

எட்டயபுரத்தில் மதியம் 1.40 மணி அளவில் மிதமான மழை சுமார் முக்கால் மணி நேரம் பெய்தது. கயத்தாறில் மதியம் 1 மணி அளவில் பலத்த மழை சுமார் அரை மணி நேரம் பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக வைப்பாறு பகுதியில் 100 மில்லி மீட்டரும், விளாத்திகுளம் பகுதியில் 58 மில்லி மீட்டரும், சூரங்குடியில் 52 மில்லி மீட்டரும், எட்டயபுரம் பகுதியில் 26 மில்லி மீட்டரும், காடல்குடியில் 22 மில்லி மீட்டரும், வேடநத்தம் பகுதியில் 20 மில்லி மீட்டரும், தூத்துக்குடி 16.1 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 15 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

மழை விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

திருச்செந்தூர்17

குலசேகரன்பட்டினம்10

காயல்பட்டினம்12

விளாத்திகுளம்58

காடல்குடி22

வைப்பாறு100

சூரங்குடி52

கோவில்பட்டி15

கயத்தாறு7

கடம்பூர்5

கழுகுமலை12

ஓட்டப்பிபிரம்13

மணியாச்சி2

வேடநத்தம்20

கீழஅரசடி4

எட்டயபுரம்26

சாத்தான்குளம்1.6

தூத்துக்குடி16.1

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com