நேபாளத்தில் புயலுடன் கனமழை; பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

நேபாளத்தில் புயலுடன் பெய்த கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
Published on

காட்மாண்டு,

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தில், தலைநகர் காட்மாண்டுவுக்கு தெற்கே சுமார் 128 கி.மீ.க்கு அப்பால் பரா, பர்சா மாவட்டங்கள் அமைந்துள்ளன. அருகருகே அமைந்துள்ள இந்த மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் திடீரென கடுமையான புயல் வீசியது.

பலத்த வேகத்துடன் காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. மக்கள் குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் பறந்தன. அதுமட்டுமின்றி புயல் காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால் சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன.

மணிக்கு சுமார் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் சாலையில் நின்றிருந்த கார்கள் கவிழ்ந்தன. பரா மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும் கவிழ்ந்தது. இதில் பயணிகள் பலர் உயிரிழந்தனர்.

இதைப்போல மரங்கள் முறிந்து விழுந்ததில் பல வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாலைகளில் சரிந்ததால் போக்குவரத்தும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டு 2 மாவட்டங்களும் இருளில் மூழ்கின. மேலும் வாகனங்கள் செல்ல முடியாமல் கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த பெரும் துயரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், கவிழ்ந்த வாகனங்களில் சிக்கியும், மரங்கள் முறிந்து விழுந்துமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பரா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அத்துடன் 600-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினரை நேபாள அரசு பணி அமர்த்தி இருக்கிறது. அத்துடன் ராணுவமும் மீட்புப்பணிக்கு விரைந்து உள்ளது.

அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கார்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அங்கு மோசமான வானிலை நிலவுவதால் ஹெலிகாப்டர்களை பணியில் அமர்த்த முடியவில்லை.

பரா மற்றும் பர்சா மாவட்டங்களை புயல் தாக்கியதை தொடர்ந்து பிரதமர் கே.பி.சர்மா ஒளி தலைமையில் நேற்று காலையில் மந்திரிசபை அவசரமாக கூடியது. இதில் பேரிடர் பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் கே.பி.சர்மா ஒளி இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்து உள்ளது. மேலும் சம்பவ இடங்களில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com