ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு துபாய் நிறுவன பெண் அதிகாரி சென்னையில் கைது அமலாக்கத்துறை நடவடிக்கை

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், துபாய் நிறுவன பெண் அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
Published on

புதுடெல்லி,

மிகமிக முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்துவதற்காக, இந்திய விமானப்படைக்கு 12 ஹெலிகாப்டர்களை வாங்க முந்தைய மன்மோகன்சிங் அரசு முடிவு செய்தது. இதற்காக, ரூ.3 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இங்கிலாந்தை சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான பின்மெக்கானிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை பெற அந்நிறுவனம் இந்தியாவை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கு ரூ.423 கோடி லஞ்சம் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக கூறி, அந்த ஒப்பந்தத்தை மன்மோகன்சிங் அரசு ரத்து செய்தது.

விமானப்படை முன்னாள் தளபதி

இந்த விவகாரத்தில், விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்பட 21 பேர் மீது அமலாக்கத்துறை கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், விசாரணையின்போது, லஞ்சமாக பெறப்பட்ட பணம், துபாயில் செயல்பட்டு வரும் யுஎச்ஒய் சக்சேனா மற்றும் மேட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதும், பிறகு அப்பணம் அசையா சொத்துகளாகவும், பங்குகளாகவும் வாங்கி பகிர்ந்து கொள்ளப்பட்டதும் தெரிய வந்தது.

கைது

மேற்கண்ட 2 துபாய் நிறுவனங்களின் இயக்குனராக ஷிவானி சக்சேனா என்ற பெண் செயல்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று சென்னையில் ஷிவானி சக்சேனாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com