கொலை வழக்கில் தலைமறைவான ஓசூர் தொழில் அதிபரின் வங்கி கணக்குகள் முடக்கம் மதுரை வக்கீலும் சிக்குகிறார்

பெட்ரோல் குண்டு வீசி கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான ஓசூர் தொழில் அதிபரின் வங்கி கணக்குகளை முடக்கி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் கொலை செய்ய திட்டம் போட்டு கொடுத்த மதுரை வக்கீலும் இதில் சிக்குகிறார்.
Published on

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஆனந்த்பாபு, இவரது மனைவி நீலிமா. இவர்களை கொலை செய்ய திட்டமிட்ட கும்பல், கார் மீது லாரியை மோதவிட்டு பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் காரை ஓட்டிச் சென்ற டிரைவர் முரளி பலியானார். நீலிமா பலத்த தீக்காயங்களுடன் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தியதில் தொழில் போட்டி காரணமாக, ஆனந்த்பாபுவின் உறவினரான ஓசூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராமமூர்த்தி மதுரையைச் சேர்ந்த கூலிப்படையை ஏவி இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த டிரைவர் மகராஜன் (வயது 40) என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

மதுரை வக்கீலுக்கு தொடர்பு

மேலும் சூளகிரி கோபசந்திரத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார், மதுரையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் நீலமேகம் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக போலீசாரால் தேடப்பட்டு வரும் ஓசூர் தொழில் அதிபர் ராமமூர்த்தியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதற்காக தனிப்படை போலீசார் மதுரை, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விரைந்துள்ளனர். மேலும் ராமமூர்த்தியின் வங்கி கணக்கில் உள்ள பண பரிவர்த்தனைகளை முடக்கி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுமார் 45 வங்கி கணக்குகளின் பண பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

2 மாதங்களாக கண்காணிப்பு

கொலைக்கு திட்டம் வகுத்து கொடுத்து, கூலிப்படையை அனுப்பியது, தொழில் அதிபர் ஆனந்த்பாபு, அவரது மனைவி நீலிமா ஆகியோரை சுமார் 2 மாதங்களாக கண்காணித்தது போன்றவற்றில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. போலீஸ் தேடுவதை அறிந்த அந்த வக்கீலும் தலைமறைவாகி விட்டார். அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

கார் மீது லாரியை மோத விட்டு, பெட்ரோல் குண்டுகள் வீசி டிரைவர் கொலை செய்யப்பட்டதும், டிரைவர் மகராஜன் மதுரை சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தான் விபத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறி நீதிமன்றத்தில் சரண் அடைய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசாருக்கு ஒவ்வொரு நாளும் பல அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

தீவிர கண்காணிப்பு

இந்த கொலையில் மதுரையைச் சேர்ந்த கூலிப்படை 6 பேரும், ஓசூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 6 பேரும் என மொத்தம் 12 பேருக்கு தொடர்பு உள்ளது. அதில் ஓசூர் தொழில் அதிபர் ராமமூர்த்தியும், மதுரை வக்கீலும் தான் முக்கிய பங்கு என கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். இதற்கிடையே முக்கிய குற்றவாளியான ராமமூர்த்தி நீதிமன்றத்தில் சரண் அடைகிறாரா? என்றும், அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விடாமல் இருக்கவும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com