ரேஷன்கார்டு வைத்துள்ள சிறுவியாபாரிகள் ரூ.50 ஆயிரம் கடன் பெறுவது எப்படி? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

ரேஷன்கார்டு வைத்துள்ள சிறு வியாபாரிகள் ரூ.50 ஆயிரம் கடன் பெறுவது எப்படி என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கமளித்தார்.
Published on

மதுரை,

மதுரை மாநகரில் உள்ள 334 தையல் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை தாங்கினார். கலெக்டர் வினய், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் செல்லூர்ராஜூ கலந்து கொண்டு நிவாரண பொருட்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. கோவில்களில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ முடியாது. பக்தர்களை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை. என்றைக்கும் நாங்கள் இறை நம்பிக்கை உள்ளவர்கள். இன்று உள்ள சூழ்நிலையில் கொரோனாவை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படாமல் உள்ளது. கொரோனா ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு கோவில்கள் திறக்கப்படும். கொரோனா பரவுவதை தடுப்பதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய 12 உயர்மட்ட குழுக்கள், மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆலோசனையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறுவியாபாரிகள்

மக்களுடைய பொருளாதாரம் பாதிக்காத வகையில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பஸ்களில் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் அதிகமாக ஏற்றுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன்கார்டு வைத்துள்ள இளநீர் கடை, டீக்கடை, பெட்டிக்கடை, காய்கறி கடை என 15 லட்சத்து 75 ஆயிரத்து 319 சிறு வியாபாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு சிறுவணிகக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலத்திலும் 934 பேருக்கு ரூ.2 கோடியே 88 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் மதுரையில் மட்டும் இதுவரை ரூ.4.80 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக்கடன் வழங்கப்படுவது இல்லை. கூட்டுறவு வங்கிகளான 23 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் 874 கிளைகளில் சிறுவணிகக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் உத்தரவின்படி சிறுவணிகக்கடன் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் சிறுவணிகக்கடன் வழங்கப்படும். தகுதியானவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என நோட்டீஸ் ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com