புதுடெல்லி,
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் பெண் டாக்டரை கற்பழித்து கொன்று, பின்னர் உடலை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் கடந்த 6-ந் தேதி போலீசாரால் என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப் குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளனர். அந்த மனுவில், இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் உள்ளிட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என்றும், இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு அல்லது வெளிமாநில சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.