நூதன வரதட்சணை கேட்டு டாக்டரை மணந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பேராவூரணியில் ருசிகரம்

தஞ்சை மாவட்டம், பேராவூரணியல் நூதன வரதட்சணை கேட்டு டாக்டரை ஐ.ஏ.எஸ். அதிகாரி மணந்தார்.
நூதன வரதட்சணை கேட்டு டாக்டரை மணந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பேராவூரணியில் ருசிகரம்
Published on

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அப்பகுதியில் உள்ள மரம் அறுக்கும் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கனகா. இவர் தென்னை ஓலையில் கீற்று பின்னும் கூலி தொழிலாளி, இவர்களுடைய மகன் சிவகுரு பிரபாகரன்(வயது33). இவர் சிறுவயதில் இருந்தே ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என லட்சியமாக இருந்தார். சிவகுரு பிரபாகரன் ஒட்டங்காடு அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் புனல்வாசல் கிராமத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்து சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் பொறியியல் பட்டம் பெற்றார்.

இதைத்தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தீவிரமாக படித்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். இவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 101-வது இடமும், தமிழக அளவில் 3-வது இடமும் பிடித்தார். சிவகுரு பிரபாகரன் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி கலெக்டராக உள்ளார். இவர் டாக்டருக்கு படித்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தார். இதனால் அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.

வரதட்சணை

ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவகுருபிரபாகரன் வரதட்சணையாக விதித்த நிபந்தனையால் பெண் வீட்டார் தயங்கினர். இந்த நிலையில் சிவகுரு பிரபாகரனுக்கும்- சென்னையை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணபாரதிக்கும் கடந்த 26-ந்தேதி பேராவூரணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. கிருஷ்ணபாரதி சென்னையில் உள்ள கல்லூரியில் பணி புரியும் பேராசிரியரின் மகள் ஆவார்.

சிவகுரு பிரபாகரன் கேட்டும் நூதன வரதட்சணையால் மற்ற பெண்வீட்டார் தயங்கிய நிலையில் டாக்டர் கிருஷ்ணபாரதி மட்டும் எப்படி திருமணம் செய்ய சம்மதித்தார், சிவகுரு பிரபாகரன் வைத்த நிபந்தனை என்ன என்பது குறித்து அவரே கூறியதாவது:-

பலர் எனக்கு பெண் கொடுக்க முன்வந்தனர். ஆனால் நான் வைத்த நிபந்தனையை ஏற்க பலர் மறுத்துவிட்டனர். டாக்டர் படித்த பெண்ணை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தேன். நான் திருமணம் செய்யும் பெண், நான் பிறந்து வளர்ந்த ஒட்டங்காடு கிராம மக்களுக்கும், அதன் அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கும், நாங்கள் எப்போதெல்லாம் சொந்த ஊருக்கு வருகிறோமோ அப்போதெல்லாம் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற நிபந்தனை வைத்தேன். இதையே எனது திருமண வரதட்சணையாக எதிர்பார்த்தேன்.

கிராம மக்கள் பாராட்டு

இதற்கு பல பெண்கள் ஒத்துக்கொள்ளாத நிலையில் டாக்டர் கிருஷ்ணபாரதி மட்டும் சம்மதம் தெரிவித்ததால் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்றார். இந்த காலத்தில் சாதாரணமானவர்களே தங்களது திருமணத்திற்கு வரதட்சணையாக தங்க நகைகள், பணம், மோட்டார் சைக்கிள் என்று எதிர்பார்க்கும் நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தான் பிறந்த கிராம மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என பெண் வீட்டாரிடம் வரதட்சணையாக கேட்டதை அந்த கிராம மக்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com