ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டம் நேற்று ஸ்ரீநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா தலைமை தாங்கினார். கூட்ட முடிவில் கட்சியின் செய்திதொடர்பாளர் கூறியதாவது:-
மாநிலத்தில் குறிப்பாக காஷ்மீர் பிராந்தியத்தில் நிலவும் உறுதிப்படுத்தப்படாத மற்றும் பதற்றமான சூழ்நிலை குறித்து கட்சி தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது. காஷ்மீரில் தற்போது உள்ள ஒரு புதிரான சூழ்நிலையை விலக்க வேண்டும் என்று மத்திய அரசை கட்சி தலைமை வலியுறுத்துகிறது. அதோடு உள்ளூர் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த அவசர நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயன்றால் கட்சி போராடும் என தலைவர்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். சோதனையான இந்த நேரத்தில் மக்கள் ஒருங்கிணைந்து அமைதி காக்க வேண்டியது அத்தியாவசியம் என்றும் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீநகரில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, துணைத்தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, மக்கள் மாநாடு கட்சி சஜத் லோன், ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் ஷா பாசல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாரிகாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பரூக் அப்துல்லா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயன்றால் போராடுவது என்றும், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் இதுதொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது என்றும் ஒரு தீர்மானத்தை வாசித்தார். அனைத்து கட்சி தலைவர்களும் இதனை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
மெஹபூபா முப்தி வீட்டில் நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம், பரூக் அப்துல்லா உடல்நலம் இல்லாமல் இருப்பதால் அவரது வீட்டிலேயே நடைபெற்றது.